அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்' கீழ், அமெரிக்க நீதித்துறை அண்மையில் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் ஆச்சரியமான விஷயமாக, தற்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தில் அமைச்சர்களாகவும், ஆலோசகர்களாகவும் இருக்கும் குறைந்தது ஆறு முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புடையவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் (Secretary of Commerce) ஹோவர்டு லட்னிக் (Howard Lutnick), எப்ஸ்டீனின் தனிப்பட்ட கரீபியன் தீவுக்குத் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றது ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த "எப்ஸ்டீனுடன் எனக்குத் தொடர்பு இல்லை" என்ற கூற்றை முற்றிலும் பொய்யாக்கியுள்ளது.
மேலும், கடற்படைச் செயலாளர் (Secretary of the Navy) ஜான் வேலன், பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் (Deputy Secretary of Defense) ஸ்டீவன் பெயின்பெர்க் மற்றும் ட்ரம்ப்பின் மிக நெருக்கமான ஆலோசகரான ஸ்டீவ் பேனன் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. குறிப்பாக, ஸ்டீவ் பேனன் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் எப்ஸ்டீனுடன் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டதும், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட விமானம் மற்றும் பங்களாக்களைப் பேனன் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்ஸ்டீனின் இமேஜை சரிசெய்ய பேனன் அவருக்கு ஊடகப் பயிற்சி அளித்த தகவலும் இந்தக் கோப்புகளில் பதிவாகியுள்ளது.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, "எப்ஸ்டீனுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை எப்படி நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பொறுப்புகளில் அமர்த்தலாம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அட்டர்னி ஜெனரல் பமீலா பாண்டி, இந்த ஆவணங்களில் ட்ரம்ப்பின் பெயர் 'ஆயிரக்கணக்கான முறை' இடம்பெற்றுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும், இவை அனைத்தும் எப்ஸ்டீன் ஒரு தொழிலதிபர் என்ற முறையில் பலரையும் சந்தித்ததன் பதிவுகளே தவிர, எவ்விதக் குற்றச் செயல்களிலும் இந்த அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹோவர்டு லட்னிக் உள்ளிட்ட அதிகாரிகளைப் பதவிலகக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) அழுத்தம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றதை மறைத்ததற்காக லட்னிக் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் எப்ஸ்டீன் கோப்புகளால் பல தலைவர்கள் பதவியிழந்து வரும் நிலையில், அமெரிக்காவில் தற்போதைய ஆளுங்கட்சி அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகியுள்ளது 2026-ம் ஆண்டின் மிகப்பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இந்த விவகாரம் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
