பிரிட்டனின் லீமிங்டன் ஸ்பா (Leamington Spa) பகுதியில் உள்ள ஒரு பூங்காவில், கடந்த ஆண்டு மே மாதம் 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாக்கிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் இருவர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. "அவன் ஒரு மிருகம், இந்தச் சட்ட அமைப்பையே ஏமாற்றிவிட்டான்; பொதுமக்களுக்குச் சிறந்த பாதுகாப்பு தேவை" என்று இந்தத் தீர்ப்பின்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அந்த நபர் தஞ்சம் கோரியபோது (Asylum status) அவரது பின்னணி முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அண்மையில் வெளியான புள்ளிவிவரங்களின்படி (செப்டம்பர் 2025 வரை), பிரிட்டனில் தஞ்சம் கோருபவர்களில் 10-ல் ஒருவர் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவராக உள்ளனர். 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் பிரிட்டனுக்கு வரும் அகதிகளின் பட்டியலில் பாக்கிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட பாக்கிஸ்தானியர்கள் பிரிட்டனில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கல்வி அல்லது சுற்றுலா விசாக்களில் பிரிட்டனுக்குள் நுழைந்து, பின்னர் தங்களது நாட்டில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அகதிகளாகத் தங்கிவிடுகின்றனர்.
இந்த அகதிகளின் விண்ணப்பங்கள் மீதான விசாரணை பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதால், அவர்கள் தசாப்த கணக்கில் பிரிட்டனில் தங்கும் சூழல் உருவாகிறது. இந்தச் இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அந்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "உண்மையான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது அவசியம், ஆனால் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து வெளியேற்றத் தவறுவது சமூகப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசு அகதிகள் தொடர்பான விதிகளையும், விசா மூலம் வந்து தஞ்சம் கோருபவர்கள் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தக் கொடூரச் சம்பவம் தங்களது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
