பாலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகரான ராஜ்பால் யாதவ், சுமார் 9 கோடி ரூபாய் கடன் மோசடி மற்றும் செக் மோசடி வழக்கில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2026) அவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதுடன், அடுத்த விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜ்பால் யாதவ் தனது 'அதா படா லாபதா' (Ata Pata Laapata) என்ற படத்தை இயக்க டெல்லியைச் சேர்ந்த முரளி ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கடன் வாங்கினார். படம் தோல்வியடைந்ததால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. வட்டியுடன் சேர்ந்து இந்தக் கடன் தொகை 9 கோடியாக உயர்ந்தது. கடனைத் திருப்பித் தருவதாக நீதிமன்றத்தில் பலமுறை உறுதி அளித்தும், அவர் கொடுத்த செக்குகள் பவுன்ஸ் ஆனதால், 2018-ஆம் ஆண்டு அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பலமுறை அவகாசம் கொடுத்தும் அவர் பணத்தைச் செலுத்தாததால், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜ்பால் யாதவின் இந்த இக்கட்டான நிலையில், பாலிவுட் திரையுலகம் அவருக்கு ஆதரவாகத் திரண்டுள்ளது. நடிகர் சோனு சூட் தான் இயக்கும் அடுத்த படத்தில் ராஜ்பால் யாதவை ஒப்பந்தம் செய்து, அதற்கான முன்பணத்தை (Signing Bonus) வழங்கி உதவியுள்ளார். அவரைத் தொடர்ந்து சல்மான் கான், அஜய் தேவ்கன், வருண் தவான், டேவிட் தவான் மற்றும் பாடகர் மீகா சிங் (11 லட்சம் ரூபாய் நிதியுதவி) ஆகியோர் ராஜ்பால் யாதவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.
இன்றைய விசாரணையின் போது, நீங்கள் 25 முதல் 30 முறை நீதிமன்றத்தில் ஆஜராகிப் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்தீர்கள்; ஆனால் ஒருமுறை கூட அதைச் செய்யவில்லை என்று நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா ராஜ்பால் யாதவைக் கடுமையாகச் சாடினார். உங்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை, நீங்கள் வேண்டுமென்றே காலதாமதம் செய்துள்ளீர்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதற்கிடையில், ராஜ்பால் யாதவ் சரணடைவதற்கு முன்பு, என்னிடம் பணம் இல்லை, யாரிடமும் கேட்க வழியில்லை என்று அழுதுகொண்டே பேசிய வீடியோ அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
