பிரிட்டனில் நடுங்க வைக்கும் பயங்கரம்: 12 வயது சிறுவர்களை 'அடிமைகளாக' மாற்றி போதைப்பொருள் சாம்ராஜ்யம்! குடும்பத்தோடு சிக்கிய கும்பல்!

பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த 'குற்றக் குடும்பம்' (Organised Crime Family) நடத்தி வந்த பிரம்மாண்ட போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை அதிரடி சோதனைகள் மூலம் காவல்துறை முறியடித்துள்ளது. குறிப்பாக, 12 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களைக் கடத்தி, அவர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மான்செஸ்டர் மற்றும் மெர்சிசைடு (Merseyside) பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் இன்று (பிப். 18, 2026) அதிகாலை 22-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். 'ஆபரேஷன் ஹாலோ' (Operation Hollow) எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கும்பல் வறுமையில் வாடும் மற்றும் ஆதரவற்ற சிறுவர்களைக் குறிவைத்து, அவர்களுக்குப் பணம் தருவதாக ஆசை காட்டி கடத்தி வந்துள்ளது.

பிடிபட்ட 12 வயது சிறுவர்கள், நகருக்கு வெளியே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தற்காலிகக் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் தப்பிக்க முயன்றால் அவர்களின் குடும்பத்தினரைக் கொன்றுவிடுவோம் என ஆயுதங்களைக் காட்டி மிரட்டியுள்ளனர். சோதனையின் போது இரண்டு போலி துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் காவல்துறையின் துப்பறியும் அதிகாரி ஜோ ஹாரோப் இது குறித்துக் கூறுகையில், "சிறுவர்களைச் சுரண்டி, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தும் இத்தகைய கும்பல்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார். கைதானவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Post Next Post

Contact Form