12-ம் வகுப்பு மாணவன் பார்த்த பிரசவம்: அறுவை சிகிச்சையில் பெண் பலி - உத்திரப்பிரதேசத்தில் பயங்கரம்.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள புக்கியா கிராமத்தில் 'நவஜீவன்' என்ற பெயரில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 5, 2026 அன்று, பிரியங்கா (28) என்ற பெண் பிரசவத்திற்காக அந்த கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார். அந்த கிளினிக்கின் உரிமையாளர் யோகேஷ் வர்மா, தான் ஒரு மருத்துவர் என்று கூறி அப்பெண்ணைச் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். ஆனால், பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் அந்தப் பெண் அறுவை சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண்ணின் மரணத்திற்குப் பிறகு அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த கிளினிக் ஒரு போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. மேலும், அறுவை சிகிச்சையின் போது ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர் கூட அங்கு இல்லை என்பதும், யோகேஷ் வர்மா என்ற 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் அந்தப் பெண்ணிற்குப் பிரசவம் பார்த்துள்ளான் என்பதும் அம்பலமானது. முறையான மருத்துவ அறிவு இல்லாத ஒருவர் அறுவை சிகிச்சை செய்ததால், அப்பெண்ணிற்கு அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிர் பிரிந்தது விசாரணையில் உறுதியானது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் போலி கிளினிக் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த 12-ம் வகுப்பு மாணவன் யோகேஷ் வர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த கிளினிக்குடன் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். ஒரு போலி கிளினிக் இத்தனை நாட்களாக எந்தவித அனுமதியும் இன்றி எப்படிச் செயல்பட்டது என்பது குறித்து மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர் என்று நம்பிச் சென்ற இடத்தில், மாணவன் ஒருவன் அறுவை சிகிச்சை செய்ததால் ஒரு உயிர் பறிபோனது அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இதுபோன்ற போலி கிளினிக்குகள் உயிரோடு விளையாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மக்கள், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post

Contact Form