GO BACK

13 வயது சிறுவன் மீது கொலை முயற்சி வழக்கு! சக மாணவர்கள் மீது கத்திக்குத்து - பதறவைக்கும் பின்னணி!

லண்டனின் வடமேற்குப் பகுதியில் உள்ள ப்ரெண்ட் (Brent) மாவட்டத்தில் அமைந்துள்ள கிங்ஸ்பரி உயர்நிலைப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அரங்கேறிய கத்திக்குத்துச் சம்பவம் பிரிட்டன் முழுவதையும் அதிரவைத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, அவன் மீது 'கொலை முயற்சி' (Attempted Murder) உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 12:40 மணியளவில் பள்ளியில் திடீரென கலவரம் வெடித்தது. அப்போது அந்த 13 வயது சிறுவன், சக மாணவர்களான 12 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த மாணவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆரம்பத்தில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், தற்போது அவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டி சீராக (Stable) உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அந்தச் சிறுவன் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் மட்டுமின்றி, பள்ளி வளாகத்திற்குள் கத்தியை வைத்திருந்தது மற்றும் மற்றொரு சிறுவன் மீது 'பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே' (Insect spray) போன்ற ஒரு நச்சுத் தன்மையுள்ள பொருளைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. 

அந்தச் சிறுவன் அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவன் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவன் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளான். வயதுக் காரணியால் அவனது பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

மார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் நடந்த இந்த வன்முறை குறித்துப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள தலைமை ஆசிரியர், இது நமது பள்ளி சமூகம் முழுவதற்கும் ஒரு ஆழமான அதிர்ச்சிகரமான நிகழ்வு என்று வருத்தம் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் கத்திக்குத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவது லண்டனில் ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், இந்தப் பதின்ம வயது சிறுவனின் செயல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.