GO BACK

மேலும் ஒரு கத்திக் குத்து- பல்கலைக்கழக மாணவர் குத்திக்கொலை - 18 வயது இளைஞர் கைது

 

லெசெஸ்டர்: இங்கிலாந்தின் லெய்செஸ்டர் (Leicester) நகர மையத்தில் உள்ள டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக (De Montfort University - DMU) வளாகத்திற்கு அருகே நடைபெற்ற ஒரு கோரமான கத்திக் குத்து சம்பவத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் ஆக்ஸ்போர்டு தெருவில் (Oxford Street) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சாலையில் ஒரு நபர் மயங்கி விழுந்து கிடப்பதாகக் காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து விரைந்த அதிகாரிகள், அவர் கத்தியால் குத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.

படுகாயமடைந்த அந்த 20 வயது மதிக்கத்தக்க மாணவர், உடனடியாக லெய்செஸ்டர் ராயல் இன்ஃபர்மரி (Leicester Royal Infirmary) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் போலீசார் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் என்பதைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கேட்டி நார்மிங்டன் (Professor Katie Normington) கண்ணீருடன் உறுதி செய்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையின்படி, தெருவில் இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் மற்றும் மோதலே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு நபர் தப்பியோடிய நிலையில், பின்னர் அவர் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் 'டேஷ்கேம்' (Dashcam) காட்சிகளைப் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பல்கலைக்கழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினருக்கும், சக மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. "நமது நகரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இது போன்ற சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை" என லெய்செஸ்டர் நகர மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வேதனையைப் பகிர்ந்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் தடயங்களைச் சேகரித்து வருவதால் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.