
மரணக் குழி: மேகாலயா சட்டவிரோத சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து - 18 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி!
மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் உள்ள தாங்க்ஸ்கு (Thangsku) கிராமத்தில், இன்று காலை சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த சக்திவாய்ந்த டைனமைட் வெடிப்பு, ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மிகவும் குறுகிய 'எலி வலை' (Rat-hole) போன்ற சுரங்கப் பாதையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சிக்கி இதுவரை 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அண்டை மாநிலமான அசாமிலிருந்து பிழைப்புக்காக வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த கோர விபத்து குறித்து மேகாலயா மாநில காவல்துறை தலைவர் ஐ. நோங்ராங் கூறுகையில், சுரங்கத்தின் ஆழத்தில் டைனமைட் வெடித்த வேகத்தில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததாகவும், அதில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சுரங்கத்திற்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயாவில் இத்தகைய 'எலி வலை' சுரங்க முறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) 2014-ஆம் ஆண்டே தடை விதித்திருந்தது. இருப்பினும், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவுடன் ரகசியமாகச் செயல்படும் இதுபோன்ற சட்டவிரோத சுரங்கங்கள், ஏழை தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் மரணக் குழிகளாக மாறிவருகின்றன. பாதுகாப்பற்ற முறையில் மிகக் குறுகிய துளைகள் மூலம் நிலக்கரி தோண்டப்படுவதே இந்தத் தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிழக்கு ஜெயந்தியா மலை மாவட்ட காவல்துறை தானாக முன்வந்து (Suo Motu FIR) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதோடு, இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வரும் வேளையில், சட்டவிரோத சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இதற்குத் துணையாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பிழைப்பு தேடி வந்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் புதைந்த தொழிலாளர்களின் மரணம், மேகாலயாவில் நிலவும் சட்டவிரோத சுரங்க மாஃபியாக்களின் கொடூர முகத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. வரும் பிப்ரவரி 9-ஆம் தேதியன்று இது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.