கடந்த 2007-ம் ஆண்டு மே 3-ம் தேதி, போர்ச்சுகலின் பிராயா டா லஸ் (Praia da Luz) பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தனது பெற்றோருடன் தங்கியிருந்த 3 வயது சிறுமி மெடலின் மெக்கான் திடீரென மாயமானார். உலகின் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த மர்ம வழக்கில், தற்போது வெளியாகியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
வெளியாகியுள்ள ஆவணங்களின்படி, 2009-ம் ஆண்டு ஒரு நபர் எப்.பி.ஐ-யிடம் (FBI) அளித்த வாக்குமூலத்தில், எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் (Ghislaine Maxwell) ஒரு சிறுமியுடன் செல்வதைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்தச் சிறுமியின் தோற்றம் மெடலின் மெக்கான் போலவே இருந்ததாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணில் உள்ள தனித்துவமான அடையாளத்தை (Coloboma) ஒத்திருப்பதாகவும் அந்தச் சாட்சி குறிப்பிட்டுள்ளார். சுமார் 6 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமிக்கும் மெக்கான் கடத்தப்பட்ட காலத்திற்கும் இடையிலான வயதுப் பொருத்தம் அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இருப்பினும், இந்தத் தகவலை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் தற்போதுவரை ஒரு 'உறுதிப்படுத்தப்படாத சாட்சியமாகவே' கருதுகின்றனர். எப்ஸ்டீன் ஆவணங்களில் மெடலின் பெயர் இருப்பது அவர் கடத்தப்பட்டதற்கான நேரடி ஆதாரம் அல்ல என்றும், அது ஒரு நபரின் தனிப்பட்ட அவதானிப்பு மட்டுமே என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கிஸ்லைன் மேக்ஸ்வெல் சிறுமிகளைப் பாலியல் கடத்தல் செய்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருப்பதால், இந்தத் தகவலைக் கூடுதல் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மெடலின் மெக்கான் காணாமல் போன வழக்கில் ஏற்கனவே ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நபர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் அடிபடுவது இந்த மர்மத்தை மேலும் ஆழமாக்கியுள்ளது. 19 ஆண்டுகளாகத் தனது மகளைத் தேடி வரும் அவரது பெற்றோருக்கு இந்தத் தகவல் ஒருவேளைப் புதிய நம்பிக்கையையோ அல்லது கூடுதல் வேதனையையோ தரக்கூடும். இந்த வழக்குத் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்த பிரிட்டிஷ் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
.jpg)