GO BACK

பனையூரில் 2 மணி நேரத்தில் தீர்ந்த மனுக்கள்! விஜய்யின் அடுத்த மூவ் என்ன?


பனையூரில் த.வெ.க தொண்டர்கள் கடல்: 2 மணி நேரத்தில் தீர்ந்த மனுக்கள்! விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் போவதாக அறிவித்துத் தொடங்கப்பட்ட நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', தனது முதல் தேர்தல் பாய்ச்சலைத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் போட்டியிட ஆர்வம் காட்டும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை முதலே குவியத் தொடங்கினர்.

மதியம் 12 மணிக்குத் தொடங்க வேண்டிய விநியோகத்திற்காக, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்கள் பனையூர் இ.சி.ஆர் சாலையில் அணிவகுத்து நின்றன. சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் திரண்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டதை விடப் பல மடங்கு அதிகமான கூட்டம் வந்ததால், கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தன்னார்வலர்களும், போலீசாரும் திணறிய நிலையில், பாதுகாப்பு கருதிப் பனையூர் அலுவலகத்தின் கதவுகள் அவ்வப்போது அடைக்கப்பட்டன.

மனு விநியோகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான விண்ணப்பப் படிவங்கள் மதியம் 2.30 மணிக்கே முழுமையாகத் தீர்ந்து போயின. பல மாவட்டங்களிலிருந்து பேருந்து மற்றும் வேன்களில் வந்திருந்த தொண்டர்கள், வரிசையில் பல மணி நேரம் நின்றும் மனு கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர். "நாங்கள் ஒரு வாரம் அவகாசம் கொடுத்திருந்தும், முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய எழுச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிலர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்தும், விண்ணப்பங்கள் தீர்ந்து போனதாலும் விருப்ப மனு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகத் த.வெ.க தலைமை அறிவித்தது. இதனால் ஆவேசமடைந்த சில தொண்டர்கள் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையிலான குழுவினர், கூடுதல் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் என்றும், பிப்ரவரி 14-ம் தேதி வரை மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதியளித்தனர்.

இந்தச் சம்பவம் த.வெ.க-வின் பலத்தை மற்ற கட்சிகளுக்குக் காட்டும் ஒரு குறியீடாகப் பார்க்கப்பட்டாலும், கூட்டத்தை முறைப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளன. குறிப்பாக, கடந்த காலங்களில் நடந்த கட்சி மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட நெரிசல் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இனிவரும் நாட்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை விநியோகிப்பது அல்லது மண்டல வாரியாகப் பிரித்து வழங்குவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.