முசாபர்நகர் கொலை வழக்கில் இருந்து 22 பேர் அதிரடி விடுதலை!நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு!

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி, முசாபர்நகரின் 'முகமது பூர் ரைசிங்' (Mohammadpur Raisingh) கிராமத்தில் ஒரு கும்பல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது. இதில் ரஹீஷுதீன் என்பவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். மேலும், கிராமத்தில் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மொத்தம் 26 பேர் மீது கொலை, கொள்ளை மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையின்போது 4 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 22 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிஷ்க் குமார், அரசு தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் குற்றச்சாட்டுகளைச் 'சந்தேகத்திற்கு இடமின்றி' நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, வன்முறை நடந்த சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்தனர் என்பதற்கான வலுவான ஆதாரங்களைச் சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பிக்கவில்லை. மேலும், பல முக்கிய சாட்சிகள் விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதும், சிலர் பிறழ் சாட்சிகளாக (Hostile Witnesses) மாறியதும் இந்த விடுதலையில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

அரசு தரப்பு வழக்கறிஞர் நரேந்திர சர்மா கூறுகையில், "ஹனீஃப் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு மசூதி சேதப்படுத்தப்பட்டதாகவும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் இவை எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார். விடுதலையான அனில், சுபாஷ் உள்ளிட்ட 22 பேரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முசாபர்நகர் கலவரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளில் பெரும்பாலானவை, போதிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலேயே இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன அல்லது குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2013-ல் நடந்த இந்தக் கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 40,000-க்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர் என்பது மாநில வரலாற்றின் ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் கருதப்படுகிறது.

Previous Post Next Post

Contact Form