GO BACK

260 பேரின் மரணத்திற்கு விமானியே காரணமா? அகமதாபாத் விமான விபத்தில் அதிர வைக்கும் திருப்பம்! 'வேண்டுமென்றே' என்ஜினை ஆஃப் செய்த கேப்டன்?

கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா 'பிளைட் 171' (Flight 171) போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், அடுத்த 32 வினாடிகளில் மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்திலிருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். தற்போது இந்த விபத்து குறித்த இறுதி விசாரணை அறிக்கையில், இது விபத்து அல்ல, ஒரு 'திட்டமிட்ட செயல்' (Intentional Act) என்ற அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலிய செய்தி நிறுவனமான 'கொரியர் டெல்லா செரா' (Corriere della Sera) வெளியிட்டுள்ள தகவலின்படி, விமானத்தின் என்ஜின்களுக்குச் செல்லும் எரிபொருளை நிறுத்தும் சுவிட்சுகள் (Fuel Switches) வேண்டுமென்றே கைமுறையாக அணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் கேப்டன் சுமீத் சபர்வால் (Sumeet Sabharwal) தான் இந்தச் செயலைச் செய்திருக்கக் கூடும் என்று புலனாய்வு அமைப்புகள் சந்தேகிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவின் என்.டி.எஸ்.பி (NTSB) ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட கருப்புப் பெட்டி மற்றும் விமானிகளின் உரையாடல்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

விபத்திற்குச் சில நொடிகள் முன்பாக, ஒரு விமானி மற்றொருவரிடம் "ஏன் என்ஜின்களை ஆஃப் செய்தீர்கள்?" என்று கேட்க, அதற்குப் பதிலளித்த மற்றொரு விமானி "நான் செய்யவில்லை" என்று கூறியிருப்பது காக்பிட் உரையாடலில் பதிவாகியுள்ளது. இந்தத் தரவுகள் மற்றும் காக்பிட் சுவிட்சுகள் வைக்கப்பட்டிருந்த விதம் ஆகியவற்றைக் கொண்டு, கேப்டன் சபர்வால் தான் இரண்டு என்ஜின்களையும் அடுத்தடுத்து அணைத்திருப்பார் என்று அமெரிக்க நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்திய விமானிகள் சங்கம் மற்றும் சபர்வாலின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இந்தியா இந்த 'தற்கொலை' அல்லது 'திட்டமிட்ட செயல்' என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கோளாறு என்று முடிவெடுத்தால், அது அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறும் என்பதால், ஒரு விமானியின் மீது பழியைப் போடுவது "தாங்கக்கூடிய தியாகம்" (Sustainable Sacrifice) என ஒரு அதிகாரி குறிப்பிட்டதாக அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தற்கொலை முயற்சியா அல்லது விமானியின் மனநலக் குறைபாடா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. கேப்டன் சபர்வால் இதற்கு முன்பு நீண்ட மருத்துவ விடுப்பில் இருந்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன. .