GO BACK

அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி இந்திய மாணவி உயிரிழப்பு: குடும்பத்திற்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்கி சியாட்டில் நகராட்சி அதிரடி!

கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரில், அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்திய மாணவி ஜான்வி கண்டுலாவின் குடும்பத்திற்கு $29 மில்லியன் (சுமார் ரூ.262.7 கோடி) இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி ஒப்புக்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஜான்வி கண்டுலா, சியாட்டிலில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று வந்தார். 2023 ஜனவரி 23 அன்று சாலை கடக்கும்போது, போதைப்பொருள் அவசர அழைப்புக்கு (Overdose call) சென்ற போலீஸ் அதிகாரி கெவின் டேவ் (Kevin Dave) ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. மணிக்கு 40 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் அந்த அதிகாரி 119 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம். விபத்தின் தாக்கத்தில் ஜான்வி 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுக்க மற்றொரு அதிகாரி டேனியல் ஆடர்ரின் (Daniel Auderer) பேச்சும் ஒரு காரணம். அவரது 'பாடி கேமரா'வில் பதிவான காட்சிகளில், ஜான்வியின் மரணத்தைக் கிண்டல் செய்த அவர், "அவளுக்கு வெறும் 26 வயதுதான்.. அவளது உயிருக்குக் குறைந்த மதிப்பீடுதான் (Limited value).. வெறும் 11,000 டாலருக்கு ஒரு செக் எழுதி கொடுத்தால் போதும்" என்று சிரித்துக்கொண்டே பேசியது பெரும் கண்டனங்களுக்கு உள்ளானது. இந்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இரண்டு அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஜான்வியின் குடும்பத்தினர் சியாட்டில் நகராட்சிக்கு எதிராகத் தொடர்ந்த 'தவறான மரணம்' (Wrongful death) வழக்கைத் தொடர்ந்து, தற்போது இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ.262 கோடியில், சுமார் ரூ.180 கோடி ($20 மில்லியன்) தொகையை நகராட்சியின் காப்பீட்டு நிறுவனமும், எஞ்சிய தொகையை நகராட்சியும் வழங்கும்.

இந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய சியாட்டில் நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ், "ஜான்வியின் மரணம் இதயத்தை நொறுக்கும் ஒரு சம்பவம். இந்த நிதி இழப்பீடு அவரது குடும்பத்திற்கு ஓரளவாவது நிம்மதியையும், ஒரு முடிவையும் தரும் என நம்புகிறோம். ஜான்வியின் உயிர் மிகவும் மதிப்புமிக்கது" என்று தெரிவித்துள்ளார். ஜான்வியின் கல்விச் சாதனைகளைக் கௌரவிக்கும் விதமாக அவருக்குத் தற்போது முதுகலைப் பட்டமும் (Posthumous degree) வழங்கப்பட்டுள்ளது.