Ads Top

யாரை ஏமாற்ற இந்த குரூப் 2 தேர்வு ரத்து ? விஜய் போட்டு உடைத்ததால் பெரும் சர்ச்சை !


 தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்தத் தேர்வர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணிக்காக இரவு பகலாகக் கண் விழித்துப் படித்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையை இந்தத் தேர்வு ரத்து நடவடிக்கை சுக்குநூறாக உடைத்துவிட்டதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்று சாடியுள்ள விஜய், இந்த அரசு வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே இயங்கி வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

ஏற்கனவே நகராட்சித் துறைத் தேர்வுகளில் முறைகேடு புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது குரூப் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் பெரிய முறைகேடு மறைக்கப்படுகிறதா? என்ற அதிரடி கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். நடந்த உண்மைகளை அரசு வெளிப்படையாகத் தேர்வர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்வுக்காக மாணவர்கள் செலவிட்ட உழைப்பும், காலமும், பணமும் வீணடிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று கவலை தெரிவித்துள்ள விஜய், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

இளைஞர்களின் எதிர்காலத்தோடும் கனவுகளோடும் விளையாடும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக இளைஞர்கள் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி என்று தனது எக்ஸ் தளப் பதிவில் படு ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.