GO BACK

சுடான் அல் பாஷிர் நகரில் பயங்கரம்: 3 நாட்களில் 6,000 பேர் படுகொலை - ஐநா அதிர்ச்சி அறிக்கை

சுடான் நாட்டின் தார்பூர் பிராந்தியத்தில் உள்ள அல் பாஷிர் நகரை கைப்பற்றுவதற்காக 'விரைவு ஆதரவுப் படைகள்' (RSF) என்ற துணை ராணுவக் குழு கடந்த அக்டோபர் மாதம் இறுதித் தாக்குதலை நடத்தியது. இதில் அக்டோபர் 25 முதல் 27 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் சுமார் 4,400 பேர் நகரத்திற்குள்ளேயே கொல்லப்பட்டனர் என்றும், எஞ்சிய 1,600 பேர் உயிருக்குப் பயந்து நகரை விட்டு வெளியேற முயன்றபோது எல்லையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின்போது அரங்கேறிய வன்முறைகள் "மனிதத் தன்மையற்றவை மற்றும் கொடூரமானவை" என்று ஐநா விவரித்துள்ளது. குறிப்பாக, அல் பாஷிர் பல்கலைக்கழகத்தின் 'அல்-ரஷீத்' தங்கு விடுதியில் தஞ்சம் புகுந்திருந்த 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரே இடத்தில் 500 பேர் உயிரிழந்தனர். இதைப் பார்த்த சாட்சிகள், உடல்கள் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி ஏதோ ஒரு "திகில் திரைப்படத்தைப் போல" இருந்ததாகக் கூறி கண்ணீர் வடித்துள்ளனர்.

கொலைகள் மட்டுமன்றி, பாலியல் வன்முறை, கடத்தல், சித்திரவதை மற்றும் கொள்ளை போன்ற போர்க்குற்றங்களிலும் துணை ராணுவம் ஈடுபட்டதாக 29 பக்கங்கள் கொண்ட அந்த ஐநா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இன ரீதியான வெறுப்புணர்வின் காரணமாக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் சிறுவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான உதவி மையங்களும் சிதைக்கப்பட்டுள்ளன.

ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் (Volker Türk), இந்தச் சம்பவங்கள் 'போர்க்குற்றங்கள்' மற்றும் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' என்று வகைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது சுடானில் நிலவும் இந்த மோதல் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.