GO BACK

அதிரவைக்கும் பின்னணி! ஆன்லைன் கேம் மோகம்: உயிரை மாய்த்த 3 சகோதரிகள்.


ஆன்லைன் கேம் மோகம்: உயிரை மாய்த்த 3 சகோதரிகள்! சிக்கிய உருக்கமான கடிதம் - அதிரவைக்கும் பின்னணி!

காசியாபாத் நகரில் வசிக்கும் சேதன் குமார் என்பவரது மகள்கள் பாக்கி (12), பிராச்சி (14) மற்றும் விஷிகா (16) ஆகிய மூவரும் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் நீண்ட நேரமாக செல்போனில் ஆன்லைன் கேம்களை விளையாடி வந்ததும், அதனை தந்தை கண்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த அறையை சோதனை செய்தபோது, சிறுமிகள் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், தங்களுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு பிடிக்கும் என்பதையும், அவற்றை விளையாட வேண்டாம் என பெற்றோர் அழுத்தம் கொடுத்ததால் தாங்கள் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். "எங்களை மன்னித்துவிடுங்கள்" என்ற வாசகங்களுடன் அந்த கடிதம் முடிவடைவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக்காக கையில் கொடுக்கப்பட்ட செல்போன்கள், இன்று மாணவர்களின் உயிரைப் பறிக்கும் எமனாக மாறியிருப்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. ஆன்லைன் கேமிங் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு போதை என்பதை உணராத நிலையில், சிறுமிகள் தங்களின் வாழ்வை முடித்துக் கொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த மூன்று சிறுமிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. செல்போன் பயன்பாடு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.