GO BACK

அமெரிக்காவிற்கு ஈரானின் எச்சரிக்கை: 30 நிமிடங்களில் 3 வார்னிங்! போர்க்கப்பல்களை மூழ்கடிப்போம் என ஆவேசம்.

ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் (X) தளத்தில் வெறும் 30 நிமிட இடைவெளியில் மூன்று தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் பதிவு செய்துள்ளார். அதில், "அமெரிக்கா உலகின் வலிமையான ராணுவம் என்று மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் எவ்வளவு பெரிய வலிமையான ராணுவமாக இருந்தாலும், மீண்டும் எழ முடியாத அளவுக்கு ஒரு பலமான அடியைக் கொடுக்க எங்களால் முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து ஈரானில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி வரும் நிலையில் கமேனியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கமேனியின் இரண்டாவது எச்சரிக்கை அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களைக் குறிவைத்து இருந்தது. "ஈரானை அச்சுறுத்த அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. போர்க்கப்பல் என்பது ஆபத்தான ஒரு கருவிதான், ஆனால் அந்தப் போர்க்கப்பலையே கடலின் ஆழத்திற்கு அனுப்பக்கூடிய ஆயுதம் எங்களிடம் உள்ளது; அது இன்னும் ஆபத்தானது" என்று அவர் பகிரங்கமாக எச்சரித்தார். தற்போது ஈரானுக்கு அருகில் அரேபிய கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) மற்றும் விரைவில் வரவுள்ள யு.எஸ்.எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு (USS Gerald R. Ford) ஆகிய கப்பல்களை ஈரான் மூழ்கடிக்கத் தயங்காது என்பதே இதன் பொருளாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதையும், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என டிரம்ப் கூறி வருவதையும் கமேனி கடுமையாகச் சாடினார். "47 ஆண்டுகளாக அமெரிக்காவால் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, இனியும் உங்களால் எங்களை வீழ்த்த முடியாது" என்று அவர் தனது மூன்றாவது வார்னிங்கில் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். டிரம்பின் மிரட்டல்கள் ஈரானிய மக்களைப் பணிய வைக்காது என்றும், அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்கூட்டியே முடிவுகளைத் திணிக்க முயல்வது முட்டாள்தனமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்தப் போர் மிரட்டல்களுக்கு மத்தியில், மறுபுறம் ஜெனீவாவில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒரு வழியாக 3 மணி நேரம் நீடித்து நிறைவடைந்துள்ளன. ஈரான் தனது 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் குறைக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்தாலும், கமேனியின் இத்தகைய கடுமையான எச்சரிக்கைகள் போர் பதற்றத்தை இன்னும் தணிக்கவில்லை. அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டு ஈரானின் அணுசக்தி மையங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வரும் நிலையில், "மீண்டும் எழ முடியாத அளவுக்குப் பதிலடி கொடுப்போம்" என்ற ஈரானின் எச்சரிக்கை மத்திய கிழக்கை ஒரு பெரும் போரின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.