300 செமீ பனிக்குள் புதைந்த 91 வயது முதியவர்: ஜப்பானில் நெஞ்சை உருக்கும் இயற்கைச் சீற்றம்!

ஜப்பானின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவால் ஒட்டுமொத்த நாடும் நிலைகுலைந்து போயுள்ளது. ஜப்பானிய தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை (FDMA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இதுவரை பனி தொடர்பான விபத்துகளில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 558 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக நீகாடா (Niigata), அகிட்டா (Akita) மற்றும் ஆமோரி (Aomori) ஆகிய மாகாணங்கள் இந்த இயற்கைச் சீற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை வீடுகளின் கூரைகளில் தேங்கியுள்ள கனமான பனிக் கட்டிகளை அகற்ற முயன்றபோது நிகழ்ந்துள்ளன. சுமார் 3 மீட்டர் (10 அடி) உயரத்திற்குப் பனி குவிந்துள்ளதால், பல முதியவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே பனி மலைகளுக்கு அடியில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இதில் 91 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டு வாசலிலேயே 300 செமீ பனிக்குள் புதைந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது. வீதிகள் எங்கும் மனித உயரத்தைத் தாண்டி பனிச் சுவர்கள் எழுந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

பனிப்பொழிவு ஓரளவு குறைந்தாலும், தற்போது உயர்ந்து வரும் வெப்பநிலையால் உறைந்த பனிக் கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன. இது மிகப்பெரிய பனிச்சரிவுகளையும் (Avalanches) மற்றும் கூரைகளில் இருந்து பனிப்பாறைகள் சரிந்து விழும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய அரசு ராணுவத்தை (Self-Defense Forces) களமிறக்கி பனியை அகற்றும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. "கூரை மீது ஏறிப் பனியை அகற்றும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று அரசு செய்தித் தொடர்பாளர் மினோரு கிஹாரா மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Post Next Post

Contact Form