GO BACK

இங்கிலாந்து அரசு கடும் எச்சரிக்கை - 33 விமானங்களுக்குத் தடை பாயுமா?


லண்டனில் இருந்து கோளாறுடன் பறந்த ஏர் இந்தியா! இங்கிலாந்து அரசு கடும் எச்சரிக்கை - 33 விமானங்களுக்குத் தடை பாயுமா?

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பெங்களூரு நோக்கிப் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா (AI 132) விமானத்தில், இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் (Fuel Control Switch) கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சுவிட்ச் தானாகவே 'RUN' நிலையில் இருந்து 'CUTOFF' நிலைக்கு இரண்டு முறை மாறியதாக விமானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய கோளாறு நடுவானில் ஏற்பட்டால் இன்ஜின் செயலிழக்க நேரிடும் என்ற அபாயம் இருந்தபோதிலும், விமானம் லண்டனிலிருந்து புறப்பட்டு பெங்களூரு வந்து சேர்ந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள இங்கிலாந்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான CAA, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒரு வாரக் கால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லண்டனிலேயே கோளாறு கண்டறியப்பட்ட பிறகும், போதிய பராமரிப்புச் சோதனைகள் இன்றி விமானம் எப்படிப் பறக்க அனுமதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வாரத்திற்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது மட்டுமல்லாது, அதன் வசம் உள்ள 33 போயிங் 787 ரக விமானங்கள் மீதும் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து எச்சரித்துள்ளது.

இந்தக் கோளாறு ஏன் இவ்வளவு முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது என்றால், கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த கோரமான போயிங் 787 விமான விபத்திற்கும் இதே எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு குறைபாடு லண்டன் விமானத்தில் தென்பட்டுள்ளது சர்வதேச விமானப் பாதுகாப்புத் தரத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவின் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய முதற்கட்ட ஆய்வில், அந்தச் சுவிட்சுகளில் எந்தக் கோளாறும் இல்லை என்றும், அவை சரியாகச் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது வசம் உள்ள அனைத்து போயிங் 787 விமானங்களையும் மீண்டும் ஒருமுறை பரிசோதித்துவிட்டதாகவும், எதிலும் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும் ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. விமானிகள் சுவிட்சை இயக்கும் முறையில் ஏற்பட்ட தவறாக (Incorrect procedure) இது இருக்கலாம் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், இங்கிலாந்து அதிகாரிகள் இந்த விளக்கத்தை முழுமையாக ஏற்கவில்லை. உயிருக்கு ஆபத்தான ஒரு கோளாறு கண்டறியப்பட்ட பின், உரிய பாதுகாப்புச் சான்றிதழ் இன்றி சர்வதேசப் பயணத்தை மேற்கொண்டது சட்டப்படி குற்றம் எனக் கருதப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் ஏர் இந்தியா அளிக்கப்போகும் 'மூலக் காரண ஆய்வு' (Root-cause analysis) அறிக்கையைப் பொறுத்தே, அந்நிறுவனத்தின் சர்வதேசப் போக்குவரத்து உரிமங்கள் மற்றும் இங்கிலாந்து வான்வெளியில் போயிங் 787 விமானங்களை இயக்குவதற்கான அனுமதி ஆகியவை தீர்மானிக்கப்படும்.