மும்பை கடற்பரப்பில் 3 'நிழல் கப்பல்கள்' பறிமுதல்: சர்வதேச எண்ணெய் கடத்தல் முறியடிப்பு

பிப்ரவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், இந்திய கடலோர காவல்படை மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) ஒரு ரகசிய தேடுதல் வேட்டையை நடத்தியது. இதில் ஸ்டெல்லர் ரூபி (Stellar Ruby), அஸ்பால்ட் ஸ்டார் (Asphalt Star), மற்றும் அல் ஜாஃப்சியா (Al Jafzia) ஆகிய மூன்று எண்ணெய் கப்பல்கள் பிடிபட்டன. இந்த கப்பல்கள் நடுவானில் (Mid-sea) சட்டவிரோதமாக எண்ணெய் பரிமாற்றம் (Ship-to-Ship transfer) செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மூன்று கப்பல்களும் அமெரிக்க நிதித்துறையின் 'ஆஃபக்' (OFAC) அமைப்பால் ஏற்கனவே தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை சர்வதேச சட்டங்களில் இருந்து தப்பிக்கத் தங்களின் அடையாளங்கள் மற்றும் கொடிகளை (Flags) அடிக்கடி மாற்றிக்கொள்ளும் 'நிழல் கப்பல்கள்' (Shadow Fleet) என அழைக்கப்படுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட போது ஒரு கப்பல் ஈரான் கொடியுடனும், மற்றவை மாலி மற்றும் நிகரகுவா கொடிகளுடனும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெய்யைச் சர்வதேச சந்தையில் விற்க முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஈரான் அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்களுக்கும், அவற்றிலுள்ள சரக்குகளுக்கும் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கும் (NIOC) எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அது தெரிவித்துள்ளது. இருப்பினும், கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி ஸ்டெல்லர் ரூபி கப்பல் ஈரானைச் சேர்ந்தது என்பதும், அல் ஜாஃப்சியா கடந்த ஆண்டு ஈரானிலிருந்து எரிபொருளை ஏற்றிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை ஈரான் நாட்டுடன் மறைமுகத் தொடர்புடைய தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை எனக் கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான உறவுகள் மேம்பட்டு வரும் சூழலில், இந்த அதிரடி நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா தனது கடல் எல்லைகளில் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்கச் சுமார் 55 கப்பல்கள் மற்றும் 12 விமானங்களை 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்கள் தற்போது மும்பை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சுங்கத்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


Previous Post Next Post

Contact Form