மத்திய கிழக்கில் நிலவும் கடும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று மதியம் நடைபெற்றது. ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல் புசைதி (Badr Albusaidi) முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது. ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி (Abbas Araghchi) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர். அமெரிக்கத் தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ரீதியான கட்டத்திற்கு (Technical Phase) நகர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அணுசக்தி செறிவூட்டலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதற்குப் பிரதிபலனாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. "நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை எட்டவே நாங்கள் ஜெனீவா வந்துள்ளோம்" என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அரகச்சி தனது எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே சமயம், அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்.
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், ஈரான் தனது ராணுவ பலத்தைக் காட்டும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏவுகணைப் பயிற்சிகளை நடத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில மணி நேரம் இந்த முக்கியமான கடல்வழிப் பாதை மூடப்பட்டது. அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பல்களை இப்பகுதியில் நிலைநிறுத்தியுள்ள நிலையில், ஈரானின் இந்த ராணுவ நடவடிக்கை பேச்சுவார்த்தை மேசையில் அழுத்தம் கொடுக்கும் ஒரு தந்திரமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கைக்குத் தயங்க மாட்டோம் என்று ஏற்கனவே எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பினரும் தங்களின் ஆலோசனைகளைத் தங்கள் நாட்டுத் தலைமையிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அமெரிக்கா, ஈரானின் 60% செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை உடனடியாகக் குறைக்கக் கோரியுள்ளது. பதிலுக்கு ஈரான் தனது எரிசக்தி மற்றும் விமானத் துறையில் அமெரிக்க முதலீடுகளை ஈர்க்க விருப்பம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வு எட்டப்படாவிட்டாலும், அடுத்தடுத்த சுற்றுகள் மூலம் ஒரு சுமூகமான உடன்படிக்கை உருவாகும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை மீண்டும் ஓமன் அல்லது துருக்கியில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
.jpg)