இந்த ஒப்பந்தங்களின்படி, அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணைகளின் உற்பத்தி ஆண்டுக்கு 1,000-க்கும் அதிகமாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படும் 'ஏம்ராம்' (AMRAAM) ஏவுகணைகள் 1,900-ஆகவும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளான 'எஸ்.எம்-6' (SM-6) உற்பத்தி 500-க்கும் அதிகமாகவும் அதிகரிக்கப்படும். பல வகையான ஏவுகணைகளின் உற்பத்தி தற்போதைய அளவை விட இரண்டு முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தப்பட உள்ளது. இது அமெரிக்காவின் "சுதந்திர ஆயுதக் கிடங்கு" (Arsenal of Freedom) என்ற திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி அறிவிப்பு வெளியான போதிலும், பங்குச் சந்தையில் ஆர்.டி.எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.3% வரை சரிவைச் சந்தித்தன. கடந்த ஒரு வருடத்தில் சுமார் 59% லாபத்தைக் கொடுத்திருந்த இந்தப் பங்குகள், தற்போது உற்பத்தி விரிவாக்கத்திற்கான கூடுதல் முதலீடுகள் மற்றும் எதிர்கால வருவாய் குறித்த தயக்கத்தால் சரிவை எதிர்கொண்டுள்ளன. மேலும், பாதுகாப்புத் துறை இதே துறையில் உள்ள எல்.3 ஹாரிஸ் (L3Harris) நிறுவனத்திலும் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்து, அதன் ஏவுகணைப் பிரிவை ஒரு புதிய பொது நிறுவனமாக (IPO) மாற்றத் திட்டமிட்டுள்ளது. இது ஆர்.டி.எக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் கடும் நெருக்கடியும், பென்டகனின் புதிய கொள்முதல் கொள்கையும் பாதுகாப்பு நிறுவனங்களை ஒரு புதிய கட்டத்திற்குத் தள்ளியுள்ளன. "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஒரு தீர்க்கமான வெற்றியை உறுதி செய்யவே இந்த உற்பத்தி அதிகரிப்பு" என்று ஆர்.டி.எக்ஸ் சி.இ.ஓ கிறிஸ் கலியோ தெரிவித்துள்ளார். சீனாவை எதிர்கொள்ளவும், உக்ரைன் போரினால் குறைந்த ஆயுதக் இருப்பை ஈடுகட்டவும் அமெரிக்கா எடுத்துள்ள இந்த "வார் மோட்" (War Mode) நடவடிக்கை, உலக ஆயுதச் சந்தையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
