கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet), தனது 25 ஆண்டுகால வரலாற்றிலேயே முதல்முறையாக ஓராண்டு வருவாயில் 400 பில்லியன் டாலர் (சுமார் ₹36 லட்சம் கோடி) என்ற இமாலய மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, இந்த வெற்றியை "மிகவும் பிரம்மாண்டமானது" (Tremendous) என்று வர்ணித்துள்ளார். குறிப்பாக, கூகுளின் தேடுபொறி (Search), யூடியூப் மற்றும் கிளவுட் சேவைகளில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியே இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது.
மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்த ஒரு தமிழர், இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தை இத்தகைய உச்சத்திற்கு இட்டுச் சென்றிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஒரு மிகப்பெரிய பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது.
சுந்தர் பிச்சை கூகுளின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, நிறுவனத்தின் மதிப்பு மற்றும் லாபம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சுந்தர் பிச்சையின் தொலைநோக்குப் பார்வையால், கூகுள் நிறுவனம் இன்று 4 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பைத் தொட்டுள்ளதோடு, 2025-ஆம் ஆண்டில் மட்டும் 15% வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரு தமிழனின் உழைப்பும் அறிவும் உலகத் தொழில்நுட்பத்தையே ஆதிக்கம் செய்து வருவதை இந்த எண்கள் பறைசாற்றுகின்றன.
இந்த அபார வெற்றிக்குக் கூகுளின் 'ஜெமினி 3' (Gemini 3) போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியே முக்கிய உந்துதலாக அமைந்துள்ளது. சுந்தர் பிச்சையின் கூற்றுப்படி, மற்ற அனைத்து மாடல்களை விடவும் ஜெமினி 3 மிக வேகமாகப் பயனாளர்களிடையே சென்றடைந்துள்ளது. 2026-ஆம் ஆண்டிற்குள் நுழையும் போது, கூகுள் நிறுவனம் ஒரு வலுவான நிலையில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்திற்காக சுமார் 185 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூகுள் கிளவுட் மற்றும் யூடியூப் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் வருவாய், சுந்தர் பிச்சையின் தலைமையில் நிறுவனம் எவ்வளவு பன்முகத்தன்மை பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது.
