தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகள் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து தேர்தல் கியரை மாற்றிவிட்டார். இருப்பினும், இந்தக் கூட்டணி "அதிமுக தலைமையிலானதா" அல்லது "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அங்கமா" என்ற விவாதம் ஒருபுறம் அனல் பறக்கிறது. பாஜகவின் பார்வையில் இது பிரதமர் மோடி தலைமையிலான தேசியக் கூட்டணியின் நீட்சி; ஆனால், அதிமுகவோ இது தங்கள் தலைமையிலான 'மெகா கூட்டணி' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறது.
இந்த முறை வெறும் சொற்ப இடங்களைப் பெற்றுத் திருப்தியடையப் பாஜக தயாராக இல்லை. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 12 முக்கியப் புள்ளிகள் அடங்கிய குழு, தமிழகம் முழுவதும் உள்ள 52 தொகுதிகளைத் தங்களின் பிரதான இலக்காக (Target) நிர்ணயித்துள்ளது. இந்தத் தொகுதிகளில் பாஜகவின் கட்டமைப்பு வேரூன்றி இருப்பதாகவும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் (Booth) 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் டெல்லி மேலிடம் நம்புகிறது.
பாஜகவின் இந்த 52 தொகுதிகள் பட்டியலோடு, வாசுதேவநல்லூர், திருக்கோவிலூர் மற்றும் கே.வி.குப்பம் போன்ற கூடுதல் தொகுதிகளையும் கைப்பற்றும் எண்ணத்தில் நயினார் நாகேந்திரன் காய்களை நகர்த்தத் திட்டமிட்டுள்ளார். இந்த 52 தொகுதிகளுக்கும் ஏற்கனவே தகுதியான வேட்பாளர் பட்டியலை பாஜக ரகசியமாகத் தயார் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவதுதான் நயினார் நாகேந்திரனின் முதல் அஜெண்டாவாக இருக்கும். ஆனால், அதிமுகவோ தங்களின் பலமான தொகுதிகளை விட்டுக்கொடுக்கத் தயங்குவதால், தொகுதிப் பங்கீட்டின் போது அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கேட்டபடி 52 தொகுதிகளை ஒதுக்கிவிட்டால், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் கணிசமான இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும். அப்படிச் செய்தால், அதிமுக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 150-க்கும் கீழே குறைய வாய்ப்புள்ளது. இது அதிமுகவின் தனிப் பெரும்பான்மை கனவை பாதிக்குமா அல்லது "கூட்டணி தர்மம்" முக்கியமா என்ற இக்கட்டான சூழலில் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைத் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
.png)