55 ஆண்டுகள்.. 10 நாடுகள்.. 89 சிறுவர்கள்! பிரான்ஸை அதிரவைத்த 'காமக் கொடூர' ஆசிரியர் - இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கைவரிசை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 79 வயது முன்னாள் ஆசிரியர் ஜாக் லெவூகில் என்பவர், கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக (1967 முதல் 2022 வரை) சுமார் 89 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மொராக்கோ, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இவர் தனது கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். தற்போது பிணையில் வர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் மீது, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாகப் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜாக் லெவூகில் தான் செய்த குற்றங்கள் அனைத்தையும் மிகத் துல்லியமாக ஒரு 'டிஜிட்டல் டைரியில்' (USB Drive) எழுதி வைத்துள்ளார். சுமார் 15 தொகுப்புகள் கொண்ட இந்த 'சுயசரிதையில்', தான் சந்தித்த சிறுவர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த பாலியல் உறவுகள் குறித்து அவர் விவரித்துள்ளார். இந்த USB டிரைவை அவரது உறவினர் ஒருவர் தற்செயலாகக் கண்டுபிடித்துப் போலீஸாரிடம் ஒப்படைத்த பின்னரே, இந்த இமாலயக் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அவர் தனது டைரியில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை 'எபேப்ஸ்' (Ephebes - பண்டைய கிரேக்க மொழியில் அழகான இளைஞர்கள்) என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திடுக்கிடும் தகவலாக, தனது தாயார் மற்றும் அத்தையைத் தலையணையால் அமுக்கிக் கொன்றதாகவும் ஜாக் ஒப்புக்கொண்டுள்ளார். 1970-களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாரையும், 1990-களில் 92 வயதான தனது அத்தையையும் அவர் கொலை செய்துள்ளார். "அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் நானே அவர்களைக் கொன்றேன்" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்துத் தற்போது தனியாகக் கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஜாக் லெவூகில் ஒரு முறைசாரா ஆசிரியராகவும், குகை ஆராய்ச்சி வழிகாட்டியாகவும் (Speleology) பணியாற்றி வந்துள்ளார். இந்த வேலையைப் பயன்படுத்தி, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 13 முதல் 17 வயதுடைய சிறுவர்களைக் கவர்ந்துள்ளார். மிகவும் 'பண்பட்டவர்' மற்றும் 'வசீகரமானவர்' போலத் தோற்றமளித்த இவர், சிறுவர்களுக்குக் கல்வி கற்பிப்பது போல நடித்து அவர்களைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். இந்தியாவில் இவர் தங்கியிருந்த காலத்திலும் பல சிறுவர்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது பிரான்ஸ் நாட்டுப் புலனாய்வுத் துறை (Grenoble Prosecution) ஒரு அரிதான நடவடிக்கையாக ஜாக்கின் புகைப்படங்கள் மற்றும் பெயரினைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. "டைரியில் உள்ள பெயர்கள் முழுமையாக இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. எனவே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்" என்று பிரான்ஸ் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

Previous Post Next Post

Contact Form