சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவில் உள்ள ஆதன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Aden Abdulle International Airport) 'ஸ்டார்ஸ்கி ஏவியேஷன்' (Starsky Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமான போக்கர் 50 (Fokker 50) ரக விமானம் நேற்று மதியம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். உடனடியாக விமானத்தை மீண்டும் தரை இறக்க முயன்றபோது, ஓடுதளத்தை விட்டு விலகி (Runway Overrun) அருகில் இருந்த இந்தியப் பெருங்கடலின் ஆழமற்ற கடற்கரைப் பகுதியில் விமானம் பாய்ந்தது.
விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதைக் கண்ட அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விபத்தின் தாக்கத்தில் விமானத்தின் ஒரு இறக்கை உடைந்து சேதமடைந்தது. இருப்பினும், விமானி மிகவும் சாமர்த்தியமாக விமானத்தைச் சாய்வாகத் தரையிறக்கி, கடலுக்குள் முழுமையாக மூழ்காமல் கரைப்பகுதியிலேயே நிலைநிறுத்தினார். இதனால் விமானத்திற்குள் இருந்த 50 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 55 பேரும் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், பயணிகள் விமானத்தின் உடைந்த பகுதிகள் வழியாக வெளியேறி, கடற்கரை மணலில் பாதுகாப்பாக நடந்து வருவதைக் காண முடிகிறது. சோமாலிய விமானப் போக்குவரத்துத் துறை இந்த விபத்து குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. "விமானியின் துரிதமான முடிவெடுக்கும் திறனே 55 உயிர்களையும் காப்பாற்றியுள்ளது" என ஸ்டார்ஸ்கி ஏவியேஷன் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
