GO BACK

வெறும் இரண்டு எழுத்து.. ரூ.580 கோடி விலை! அந்த .com டொமைனை வாங்கியது யார்?


வெறும் இரண்டு எழுத்து.. ரூ.580 கோடி விலை! அந்த .com டொமைனை வாங்கியது யார்?

இணைய உலகில் இதுவரை இல்லாத ஒரு சாதனையாக, AI.com என்ற டொமைன் பெயர் சுமார் $70 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ₹580 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் மூலம், இதுவே உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட டொமைன் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக CarInsurance.com ($49.7 மில்லியன்) மற்றும் Voice.com ($30 மில்லியன்) ஆகிய டொமைன்களே அதிக விலைக்கு விற்கப்பட்டிருந்தன.

இந்த விலையுயர்ந்த டொமைனை வாங்கியவர் பிரபல கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Crypto.com-ன் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ் மார்சலெக் (Kris Marszalek) ஆவார். கடந்த ஏப்ரல் 2025-லேயே இந்த ஒப்பந்தம் ரகசியமாக முடிக்கப்பட்டாலும், தற்போது நடைபெற்று முடிந்த சூப்பர் பவுல் (Super Bowl) கால்பந்து போட்டியின் போது ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தின் மூலமே இது பொதுமக்களுக்குத் தெரியவந்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மொத்தத் தொகையான $70 மில்லியனையும் கிரிஸ் மார்சலெக் கிரிப்டோகரன்சி மூலமாகவே செலுத்தியுள்ளார்.

இந்த டொமைன் ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது? அதற்கு முக்கியக் காரணம் அதன் Scarcity (அபூர்வத் தன்மை). 'AI' என்ற இரண்டு எழுத்துக்கள் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence) துறையைக் குறிக்கின்றன. ஒரு பிராண்டின் பெயரைக் கேட்டவுடன் அது எதைக் குறிக்கிறது என்பதை உலகிற்கு எளிதாக உணர்த்த இத்தகைய டொமைன்கள் உதவுகின்றன. "அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவது AI தான்; எனவே இது ஒரு நீண்ட கால முதலீடு" என்று கிரிஸ் மார்சலெக் கூறியுள்ளார்.

இந்தத் தளம் வெறும் தேடுதளமாக மட்டும் இருக்கப்போவதில்லை. சாமானிய மக்களும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய 'AI ஏஜென்ட்' (Personal AI Agent) சேவையை வழங்க மார்சலெக் திட்டமிட்டுள்ளார். அதாவது, பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது, தினசரி வேலைகளை அட்டவணைப்படுத்துவது, செய்திகளை அனுப்புவது போன்ற பல வேலைகளை உங்களுக்காக இந்த AI ஏஜென்ட் செய்யும். இதற்காக கடந்த ஓராண்டாக ஒரு ரகசியக் குழுவை உருவாக்கி இந்தத் தொழில்நுட்பத்தை அவர் மேம்படுத்தி வருகிறார்.

இந்த விற்பனை மூலம் அந்த டொமைனின் பழைய உரிமையாளர் மிகப்பெரிய லாபத்தைப் பெற்றுள்ளார். அவர் இந்த டொமைனைத் தொழில்நுட்பக் காரணங்களுக்காக வாங்கவில்லை; தனது பெயரின் முதலெழுத்துக்களைக் (Initials) குறிக்கவே பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். காலப்போக்கில் AI-க்கான தேவை அதிகரித்ததால், அது அவருக்கு ஒரு மிகப்பெரிய புதையலாக மாறியுள்ளது. தற்போது AI.com-ன் வருகை, ஏற்கனவே சந்தையில் உள்ள ChatGPT போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.