2020 பொதுத்தேர்தலில் 'அபே ஜனபல பக்ஷய' கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு போனஸ் ஆசனத்தை (தேசியப் பட்டியல்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் எவ்வாறு அதிகார பலத்தைப் பயன்படுத்திப் பறித்தனர் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிகம விமலதிஸ்ஸ தேரர் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி, இலங்கையின் பாதுகாப்புத் துறை மற்றும் அரசியல் உயர்மட்டத்தின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேஷபந்து தென்னகோன் முன்னிலையிலேயே தான் மரண பயமுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக விமலதிஸ்ஸ தேரர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாகவே, ரத்தன தேரரின் விருப்பத்திற்கு மாறாகத் தனித்துப் போட்டியிட்டதால் விமலதிஸ்ஸ தேரர் குறிவைக்கப்பட்டார். விமலதிஸ்ஸ தேரர் தங்கியிருந்த அஸ்கிரிய மகா விகாரையை பொலிஸார் சுற்றிவளைத்து, அங்கிருந்த தங்கத்திலான புத்தர் சிலைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கைப்பற்றியதோடு, தேரரைத் தேடி வேட்டையாடியுள்ளனர். "தேஷபந்து தென்னகோனின் உத்தரவின் பேரிலேயே உங்களை ஒரு பிடியாணையின் கீழ் (Arrest Warrant) கைது செய்ய வந்துள்ளோம்" என்று பொலிஸார் மிரட்டியதால், அவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தேர்தல் முடிவில் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்தவுடன், அந்த இடத்தைப் பிடிக்க ரத்தன தேரர் மற்றும் ஞானசார தேரர் உள்ளிட்டோர் விமலதிஸ்ஸ தேரரைத் தேடித் தீவிரமாக முயன்றுள்ளனர்.
இந்த விவகாரத்தைத் தீர்ப்பதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு விமலதிஸ்ஸ தேரர் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றபோது, அவர் ஒரு அறையில் காத்திருக்கச் சொல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து ஒரு அமைச்சரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தேஷபந்து தென்னகோன் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமித் குணரத்ன ஆகியோர் முன்னிலையில், ரத்தன தேரருக்கு அந்த நாடாளுமன்ற ஆசனத்தை வழங்குமாறு விமலதிஸ்ஸ தேரர் மிரட்டப்பட்டுள்ளார். "நான் யார் என்று தெரியுமா? நான் தான் தேஷபந்து தென்னகோன்" என்று கூறி, சுமார் 10 வெற்றுத் தாள்களில் தேரரின் கையெழுத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளனர்.
கையெழுத்திட்ட பின்னரும் விமலதிஸ்ஸ தேரர் விடப்படவில்லை. அவர் ஒரு வெள்ளை நிற டிபெண்டர் வாகனத்தில் ஏற்றப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, அவரது சிவரத்தாலேயே முகம் மூடப்பட்டு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பல வாரங்கள் பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முந்தைய அரசாங்கத்தில் தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக இருந்தபோது இந்த விசாரணைகள் முடக்கப்பட்டன. இருப்பினும், தற்போதைய புதிய பொலிஸ் மா அதிபரின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) இந்த விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளது. ஒரு மதகுருவே அதிகார வர்க்கத்தால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், இலங்கையின் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) எத்தகைய நிலையில் இருந்தது என்பதை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
