GO BACK

லண்டனில் ஸ்ரீலங்கா தூதரகம் முற்றுகை: கரும்புகை ஏந்தித் தமிழர்கள் அதிரடிப் போராட்டம் (VIDEO)


 இலங்கையின் 78-வது சுதந்திர தினம் நேற்று (பிப். 04) கொண்டாடப்பட்ட நிலையில், அதனை "கறுப்பு தினமாக" ஈழத் தமிழர்கள் அறிவித்திருந்தார்கள். இதனையடுத்து, மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தூதரகம் முன்பாகக் கூடிய பல நூறு தமிழர்கள், தமிழ்த் தேசியக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் இலங்கை அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள். (கீழே வீடியோ உள்ளது)

கரும்புகையை வெளிப்படுத்தும் புகைக் குச்சிகளை ஏந்திப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஸ்ரீலங்கா தூதரகமே கரும்புகையால் சூழ்ந்தது. இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நினைவுபடுத்தி, இலங்கை அரசு ஒரு "பயங்கரவாத அரசு" என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) பிரித்தானிய கிளை மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களுக்கு எவரும் பொறுப்பு கூறவும் இல்லை; அது தொடர்பாக எந்தவொரு முறையான விசாரணையும் நடைபெறவில்லை. மாறாக, போர்க்குற்றங்களை இழைத்த ராணுவத்தினருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டு, அவர்களைப் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது இலங்கை அரசு.

இவை அனைத்தையும் சுட்டிக்காட்டிய லண்டன் ஈழத் தமிழர்கள், பிற இன மக்களுக்கு ஆங்கிலத் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்கள். மத்திய லண்டன் பகுதி என்பதால் பல நாட்டு மக்கள் இந்தப் போராட்டத்தைக் கவனித்து, ஈழத் தமிழர்களின் அவல நிலையைத் தெரிந்துகொண்டார்கள். "நல்லாட்சி" என்று சொல்லிக்கொண்டு, இன்றுவரை தமிழர்களுக்கு எந்தவொரு அரசியல் தீர்வையும் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசு வழங்கவில்லை. மாறாக, "ஒரே இலங்கை" என்ற கோட்பாட்டையே அவர்கள் முன்நிறுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தற்போதைய அரசு அப்படியே மூடி மறைக்கப் பார்க்கிறது.

இதனை லண்டனில் உள்ள உணர்ச்சிமிக்க ஈழத் தமிழர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளார்கள். சர்வதேச ரீதியிலான நீதியான விசாரணை ஒன்று தேவை என்பதனை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இந்த எதிர்பாராத போராட்டம் இலங்கை அரசுக்கு விழுந்த ஒரு பெரும் இடியாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.