GO BACK

நாட்டை கடக்க படகில் வந்த அகதிகள்- 1,000 பேர் கடல் புயலில் பலியான கோரத் தாண்டவம்

மத்திய தரைக்கடல் பகுதியில் வீசிய 'ஹாரி' (Storm Harry) என்ற கோரத் தாண்டவமாடிய புயலில் சிக்கி, சுமார் 1,000 அகதிகள் மாயமாகி உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு இத்தாலி, ஸ்பெயின் மற்றும் மால்டா கடற்கரையைத் தாக்கிய இந்த ராட்சத புயலில் அகதிகள் சென்ற பல படகுகள் சிக்கிக்கொண்டன. லிபியா மற்றும் துனிசியாவிலிருந்து ஐரோப்பாவிற்குத் தஞ்சம் புக முயன்ற இந்த அப்பாவி மக்கள், கடலில் மூழ்கி பலியாகியிருக்கலாம் எனத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான 'மெடிட்டரேனியா சேவிங் ஹியூமன்ஸ்' (Mediterranea Saving Humans) மதிப்பிட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பேசிய அந்த அமைப்பின் தலைவர் லாரா மார்மோரேல், இது மத்திய தரைக்கடல் வழித்தடத்தில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய மனிதப் பேரழிவுகளில் ஒன்று என்று வேதனை தெரிவித்துள்ளார். ஜனவரி 14 முதல் 21 வரையிலான காலகட்டத்தில், துனிசியாவிலிருந்து புறப்பட்ட எட்டு படகுகளில் தலா 30 முதல் 50 பேர் வரை இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் படகுகள் எங்கு சென்றன அல்லது அவற்றில் இருந்தவர்களுக்கு என்னவானது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் இத்தாலி மற்றும் மால்டா நாட்டு அரசாங்கங்கள் இது குறித்துப் பேசாமல் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. "ஒரு விரலைக்கூட அசைக்காமல்" இந்த அகதிகளைக் காப்பாற்றத் தவறிய அரசு நிர்வாகங்கள் மீது தன்னார்வலர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மீட்புப் படகுகளைத் தங்களது துறைமுகங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற இத்தாலியின் கடுமையான கொள்கையால்தான் இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த அகதிகள் அனைவரும் உள்நாட்டுக் கலவரங்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பிக்க உயிரைப் பணையம் வைத்துச் சிறிய படகுகளில் பயணம் மேற்கொண்டவர்கள். அலைகளின் சீற்றம் மற்றும் சூறைக்காற்றுக்கு மத்தியில் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி அவர்கள் நடுக்கடலில் தவித்தபோது, எந்தவொரு அதிகாரப்பூர்வ மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடலில் புதைந்த இந்த 1,000 உயிர்களும் மனிதநேயத்தின் மீதான ஆறாத வடுவாக மாறியுள்ளது.