GO BACK

USS Gerald R. Ford, என்ற கடல் கோட்டை கப்பல் ஈரானை நெருங்குகிறது :இனி என்நேரம் ஆனாலும் தாக்குதல் ஆரம்பிக்கலாம் ?

 

ஈரானுக்கு செக் வைத்த டிரம்ப்: உலகையே அதிர வைக்கும் மிதக்கும் கோட்டை.. மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்தது!

"ஈரான் விளையாடுகிறது" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். போர்டு' (USS Gerald R. Ford) இப்போது மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 13 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அணுசக்தியால் இயங்கும் 'மிதக்கும் கோட்டை', ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே டிரம்ப் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அந்தப் பகுதியில் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' கப்பல் ரோந்து பணியில் இருக்கும் நிலையில், இப்போது இரண்டாவது கப்பலையும் அனுப்பி ஈரானைச் சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் மதுரோவை பிடிப்பதற்கான அதிரடி சோதனையில் கடந்த மாதம் கரீபியன் கடலில் நின்றிருந்த இந்தக் கப்பல், இப்போது அவசர அவசரமாகத் திசை மாற்றப்பட்டுள்ளது. ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தாமல், ஓமன் மற்றும் கத்தார் வழியாக மறைமுகமாகச் செய்திகளைப் பரிமாறிக்கொண்டிருந்த ஈரான் அதிகாரிகளுக்கு இது ஒரு மரண அடியாகப் பார்க்கப்படுகிறது. "ஒழுங்கா எங்க பேச்சுக்கு இணங்கி வாங்க.. இல்லைனா ஈரான் ஒரு மோசமான நாளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று டிரம்ப் கொடுத்த வார்னிங், ஈரானியத் தலைவர்களைத் தூக்கமில்லாமல் செய்துள்ளது.

இந்த அதிரடி நகர்வுக்குப் பின்னால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கைவரிசை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த புதன்கிழமை டிரம்பைச் சந்தித்த நெதன்யாகு, ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். "கடந்த முறை எங்க பேச்சுக்கு இணங்காததால தான் 'மிட்நைட் ஹேமர்' (Midnight Hammer) என்ற தாக்குதலை ஈரான் சந்திக்க வேண்டியிருந்தது.. இந்த முறையும் அதே நிலைமை வந்துவிட வேண்டாம்" என்று டிரம்ப் எச்சரித்திருப்பது, 2026-ல் ஒரு பெரிய போருக்கான அறிகுறியாகத் தெரிகிறது.

கரீபியன் கடலில் இருந்து கிளம்பியுள்ள இந்த மாபெரும் போர்க்கப்பல், அடுத்த நான்கு வாரங்களில் அரேபிய கடலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம், அமெரிக்கா தனது ராணுவ பலத்தைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. டிரம்ப் சொன்னது போல அடுத்த ஒரு மாதத்திற்குள் ஈரான் அடிபணியுமா அல்லது இந்த 'மிதக்கும் கோட்டை' தனது வேலையைக் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!