லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, நாட்டின் வர்த்தக தூதராக இருந்தபோது மிக ரகசியமான அரசு ஆவணங்களை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுக்கு (Jeffrey Epstein) கசியவிட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து பிரிட்டிஷ் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட மின்னஞ்சல்களில், வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணங்கள் குறித்த அறிக்கைகளை ஆண்ட்ரூ எப்ஸ்டினுடன் பகிர்ந்து கொண்டது அம்பலமாகியுள்ளது.
மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவலாக, 2010-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாண மறுசீரமைப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த அதிரடி ரகசியக் குறிப்புகளை ஆண்ட்ரூ எப்ஸ்டினுக்கு அனுப்பியுள்ளார். தனது சிறப்பு ஆலோசகரிடமிருந்து அறிக்கை கிடைத்த ஐந்தே நிமிடங்களில், அதை அப்படியே எப்ஸ்டினுக்கு ஆண்ட்ரூ பார்வேர்ட் செய்திருப்பது தற்போது ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரகசியங்களை மீறும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தை Thames Valley போலீசாரிடம் கொண்டு சென்ற 'ரிபப்ளிக்' (Republic) அமைப்பின் தலைவர் கிரஹாம் ஸ்மித், இது ஒரு "அரசு அலுவலகத்தில் நடந்த முறைகேடு" (Misconduct in Public Office) என்று கூறியுள்ளார். ஏற்கனவே பாலியல் புகார்களால் தனது 'இளவரசர்' பட்டத்தை இழந்த ஆண்ட்ரூ, தற்போது அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்காகக் கிரிமினல் விசாரணையைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்து சட்டப்படி, மன்னரைத் தவிர மற்ற அரச குடும்ப உறுப்பினர்களுக்குக் கிரிமினல் வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அரச குடும்பத்திலிருந்து முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ள ஆண்ட்ரூ, விண்ட்சர் பகுதியில் உள்ள தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது. இந்த மின்னஞ்சல் ஆதாரங்கள் மூலம் அவர் மீது அரசு ரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மீண்டும் ஒரு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
