ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காகத் தனது நாட்டில் உள்ள விமானப்படைத் தளங்களை (RAF Bases) அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ள பிரித்தானிய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஈரான் அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், இரு நாடுகளுக்கு இடையே பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சர்வதேச சட்டதிட்டங்களைக் காரணம் காட்டி பிரித்தானியா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் கனரக குண்டுவீச்சு விமானங்கள் குளோஸ்டர்ஷையரில் உள்ள 'RAF ஃபேர்ஃபோர்ட்' (RAF Fairford) மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள 'டியேகோ கார்சியா' (Diego Garcia) ஆகிய தளங்களில் இருந்து செயல்பட அனுமதி கோரப்பட்டது. ஆனால், முறையான சட்டப்பூர்வமான காரணங்கள் இன்றி ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் தனது மண்ணை வழங்கினால், அது சர்வதேச சட்டங்களை மீறுவதாகும் எனப் பிரித்தானியா அஞ்சுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஈரான் மீதான ராணுவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அமெரிக்காவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பிரித்தானிய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். "ஈரான் போன்ற ஆபத்தான நாட்டிடம் இருந்து உலகைப் பாதுகாக்க டியேகோ கார்சியா போன்ற தளங்கள் அவசியம். ஆனால், பிரித்தானியா பலவீனமாகச் செயல்படுகிறது" என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரித்தானியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தையும் அவர் "ஒரு பெரிய தவறு" என்று சாடியுள்ளார்.
பிரித்தானியாவின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாகத் தளங்களை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை, லிபரல் டெமக்ராட் கட்சியினர் ட்ரம்ப் பிரித்தானியாவை மிரட்டுவதாகப் புகார் கூறியுள்ளனர். தற்போதுள்ள நிலவரப்படி, இந்த மோதலால் அமெரிக்கா-பிரித்தானியா இடையிலான நீண்டகால ராணுவ உறவில் விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி உலகரங்கில் எழுந்துள்ளது.
