மத்திய கிழக்கில் ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையில் உள்ள நிலையில், அமெரிக்கா அப்பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவப் படைகளைத் தீவிரமாகக் குவித்து வருகிறது. ஈராக் போருக்குப் பிறகு, இப்பகுதியில் நடைபெறும் மிகப்பெரிய ராணுவ அணிதிரட்டலாக இது கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய போர் கப்பலான 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு' (USS Gerald R. Ford) மத்திய தரைக்கடல் பகுதியை அடைந்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.
அணுசக்தி விவகாரத்தில் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானுக்கு 10 முதல் 15 நாட்கள் மட்டுமே காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த காலக்கெடுவிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், ஈரான் தனது அணுசக்தி உரிமைகளை விட்டுக்கொடுக்க மறுப்பதும், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்பதில் உள்ள இழுபறியும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
மறுபுறம், போருக்கான ஆயத்தங்களை ஈரான் ரகசியமாகத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆட்சித் தொடர்ச்சியை உறுதிப்படுத்த அலி லாரிஜானி தலைமையிலான உயர்மட்டக் குழுவை நியமித்துள்ளார். போர் அல்லது திடீர் தாக்குதல் சூழலில் நாட்டை வழிநடத்தவும், எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இக்குழுவுக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. "நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போரைத் திணித்தால் தகுந்த பதிலடி கொடுப்போம்" என்று ஈரான் தரப்பில் உறுதியான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த ராணுவக் குவிப்பு, உலக நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை ஒரு அழுத்தத்திற்கான உத்தியா அல்லது உண்மையான போர் ஏற்பாடா என்ற குழப்பம் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. வரவிருக்கும் நாட்களில் ஈரான் முன்வைக்கும் புதிய சமரசத் திட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளன.
