கடந்த 2025 ஜூன் மாதம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா (Flight 171) விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் பலியாகினர். இதில் தனது 17 வயது மகளை இழந்த தாய் ஒருவர், ஏர் இந்தியா நிறுவனம் வழக்குகளைத் தவிர்க்கப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கூடுதல் பணம் கொடுத்து 'வாய்மூடி ஒப்பந்தம்' (Liability Waiver) செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "உண்மையை மறைக்கவும், சட்டப்படி நீதி கேட்பதைத் தடுக்கவும் கொடுக்கப்படும் இந்தப் பணம் வெறும் 'இரத்தப் பணம்' (Blood Money)" என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் இடைக்கால நிவாரணமாக ஏற்கனவே ரூ. 25 லட்சம் வழங்கிய நிலையில், தற்போது கூடுதலாக ரூ. 10 லட்சம் வரை வழங்கி ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் குடும்பங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், வருங்காலத்தில் ஏர் இந்தியா, போயிங் (Boeing) நிறுவனம் அல்லது இந்திய அரசாங்கம் மீது எந்த ஒரு சிவில் அல்லது கிரிமினல் வழக்கும் தொடர முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. "விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், நிறுவனங்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எளிய மக்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றன" எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களும், காயமடைந்தவர்களும் தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மிகவும் சொற்பமானது (Pitiful payout) என வேதனை தெரிவித்துள்ளனர். விபத்தின் கோரமான வடுக்களால் இன்னும் அவதிப்பட்டு வரும் நிலையில், வெறும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கொடுத்து அனைத்து சட்ட உரிமைகளையும் விட்டுக் கொடுக்குமாறு வற்புறுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். "எங்கள் உயிருக்குச் சில லட்சங்கள் தான் விலையா?" எனக் கண்ணீர் மல்கக் கேட்கும் அவர்கள், இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மனிதத் தவறு என்று வாதிடுகின்றனர்.
ஏர் இந்தியா நிறுவனம் இது ஒரு நியாயமான நடைமுறை எனக் கூறினாலும், சுமார் 130-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதற்கு எதிராகச் சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. போயிங் நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ள வழக்கறிஞர்கள், "இந்த மௌனப் பேரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி" எனச் சாடியுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏர் இந்தியா 182 குண்டுவெடிப்புச் சம்பவத்தைப் போலவே, இப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவது பிரித்தானிய மற்றும் இந்தியச் சமூகங்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
