தமிழக அரசியல் களம் தற்போது 'தளபதி' விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான வார்த்தைப் போரால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'புலி' படத்திற்காக விஜய் பெற்ற சம்பளத்தில் ₹15 கோடியை மறைத்ததாகக் கூறி, வருமான வரித்துறை அவருக்கு ₹1.50 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து, அபராதம் செல்லும் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ஆயுதமாக ஏந்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விஜய் ஊழல் செய்தது உறுதியாகியுள்ளது; ஊழல் கட்சி என எங்களைப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?" எனச் சாடினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கடுமையான விமர்சனத்திற்குத் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் ஐஆர்எஸ் (IRS) அதிகாரியுமான அருண் ராஜ் தற்போது அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எந்தப் பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது. ஊழல் என்றால் என்னவென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்திருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திப் பொதுப் பணத்தைக் கையாடல் செய்வதுதான் ஊழல். ஆனால், இங்கே ஒரு தனி நபர் தனது வருமான வரி தொடர்பான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதை ஊழல் என்று சொல்வது அறியாமை" என்று கொந்தளித்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சைக் கேட்டுத் தனக்குப் பாவமாக இருப்பதாக அருண் ராஜ் கிண்டலாகத் தெரிவித்தார். "பொத்தாம் பொதுவாக வரி ஏய்ப்பு (Tax Evasion) என்று கூறக்கூடாது. வருமான வரித் துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையே பல சட்ட ரீதியான கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. விஜய் தரப்பைப் பொறுத்தவரை, அபராதம் விதிப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதாகவே நாங்கள் வாதிட்டோம். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. இதில் எங்கே ஊழல் வந்தது? ஆட்சியில் இருந்தவர்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளுக்கும், இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது" என்று அவர் விளாக்கினார்.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்துத் தவெக சட்டக் குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அருண் ராஜ் உறுதிப்படுத்தினார். "காலம் தாழ்ந்து பிறப்பிக்கப்பட்ட ஒரு ஆணையை எதிர்த்துச் சட்டப்படி மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அடுத்தகட்டமாக மேல்முறையீடு செய்வது பற்றித் தலைவர் விஜய் முடிவெடுப்பார். மற்ற கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஒரு தனி நபரின் சட்டப் போராட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் எதை ஊழல், எதை வரி விவகாரம் என்று பிரித்துப் பார்க்கும் அறிவு படைத்தவர்கள்" என்று அவர் சவால் விடுத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் என அனைத்துக் கட்சிகளும் விஜயைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகை அதிமுக-வின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற அச்சத்திலேயே எடப்பாடி பழனிசாமி இத்தகைய தீவிரத் தாக்குதலில் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். "ஊழலை ஒழிக்கப் போகிறேன்" என்று விஜய் மேடையில் முழங்கியதை வைத்தே எதிர்க்கட்சிகள் அவரைத் தற்போது குறிவைத்துள்ளன. தவெக மற்றும் அதிமுக இடையிலான இந்த மோதல் வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
