செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்: திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு எதிராகப் பொங்கி எழுந்த விஜய்!


திமுக எம்.எல்.ஏ-வின் கொலைவெறித் தாக்குதல்: ரத்த வெள்ளத்தில் ஊடகவியலாளர்கள்! கொந்தளித்த விஜய் - "அறிவாலயம்" அதிர்ச்சி!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிக்குச் சொந்தமான கல் குவாரியில் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள இந்த குவாரியில், சட்டவிரோதமாகக் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, 'நியூஸ் தமிழ் 24X7' செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெபாஸ்டின் ஆகியோர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அடியாட்கள், ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் செய்தியாளர்களின் கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, கதிரவன் மற்றும் ஜெபாஸ்டின் உள்ளிட்ட மூன்று பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதியே நேரடியாகக் களத்தில் இறங்கி ஊடகவியலாளர்களைத் தாக்கியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த அராஜகத்தைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது. "ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ள விஜய், வீடியோ ஆதாரங்கள் இருந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது "வெட்கக்கேடானது" என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

"தமிழ்நாடே பாதுகாப்பின்றிப் பதைபதைத்து இருக்கும் வேளையில், முதல்வர் தூக்கத்தில் இருக்கிறார்" என்று கிண்டலாகச் சாடியுள்ள விஜய், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தாக்குதல் நடத்திய எம்.எல்.ஏ மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், "இப்படிப்பட்ட ஆட்சியை மக்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறிவது உறுதி! உறுதி! உறுதி!" எனத் தனது அறிக்கையை ஆவேசமாக முடித்துள்ளார். விஜய்யின் இந்தத் நேரடித் தாக்குதல் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post

Contact Form