GO BACK

இந்தியா மீது அணுஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சி அறிக்கை!


உலகை உலுக்கும் பகீர் தகவல்: இந்தியா மீது அணுஆயுதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதா சீனா? அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தாமஸ் ஜி. டினானோ வெளியிட்டுள்ள தகவல்கள் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடன் சீனா மோதலில் ஈடுபட்ட அதே காலக்கட்டத்தில், சீனா ரகசியமாக அணுஆயுதச் சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்கா ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2020 ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சரியாக ஒரு வாரத்திற்குப் பிறகு, அதாவது ஜூன் 22, 2020 அன்று, சீனா ஒரு ரகசிய அணுஆயுதச் சோதனையை நடத்தியுள்ளது. இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ள சின்ஷியாங் மாகாணத்தின் லாப் நூர் (Lop Nur) தளத்தில் இந்தச் சோதனை நடைபெற்றதாக அமெரிக்கா தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இந்தச் சோதனையை உலக நாடுகளின் கண்காணிப்பில் இருந்து மறைக்க சீனா ‘டீகப்ளிங்’ (Decoupling) என்ற அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. நிலத்தடி குகைகள் அல்லது பெரிய பள்ளங்களுக்குள் அணுகுண்டை வெடிக்கச் செய்வதன் மூலம், அதனால் ஏற்படும் நில அதிர்வுகளைக் குறைத்து கண்காணிப்புக் கருவிகளில் இருந்து தப்பிக்கும் முறையாகும். இதன் மூலம் சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புகளின் கண்களில் மண்ணைத் தூவி சீனா தனது பலத்தை ரகசியமாகப் பெருக்கிக் கொண்டுள்ளது.

இந்தியாவுடனான எல்லை மோதல் உச்சத்தில் இருந்த சமயத்தில் சீனா இத்தகைய சோதனையை நடத்தியது, வெறும் தற்செயலானது அல்ல என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எல்லைப் போர் ஒருவேளை முழு அளவிலான போராக மாறினால், இந்தியாவை மிரட்டவும் அல்லது அணுஆயுதத் தாக்குதல் நடத்தவும் சீனா தயாராக இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு குறித்த புதிய அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான ‘நியூ ஸ்டார்ட்’ (New START) அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் சமீபத்தில் பிப்ரவரி 2026-ல் காலாவதியான சூழலில், சீனாவின் இந்த ரகசிய நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் சீனா 1,000-க்கும் மேற்பட்ட அணுஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எந்தவொரு சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட மறுப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவின் இந்த அணுஆயுதப் பெருக்கம் ஆசிய பிராந்தியத்தில் ஒரு புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீனா வழக்கம் போல மறுத்துள்ளது. இது அமெரிக்கா பரப்பும் பொய்ப் பிரச்சாரம் என்றும், உலக நாடுகளைத் திசைதிருப்பவே அமெரிக்கா இத்தகைய தகவல்களை வெளியிடுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இருப்பினும், கல்வான் மோதலின் பின்னணியில் அணுஆயுதச் சோதனை நடத்தப்பட்டதாகத் தற்போது வெளியாகியுள்ள தகவல், இந்தியப் பாதுகாப்புத் துறையை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்துள்ளது.