இலங்கையில் 2009-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் ராணுவத்திடம் சரணடையத் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் சரணடைய விரும்பிய வேளையில், அவர்களைக் கொலை செய்யும் நோக்கில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தளபதி சவேந்திர சில்வாவுடன் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2009 மே மாதம், புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைய விரும்புவதாகவும், அவர்கள் எவ்வாறு சரணடைய வேண்டும் என்பது குறித்தும் தளபதி சவேந்திர சில்வா தனது படையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருந்தார். அந்தத் தருணத்தில் அவருக்கு கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில், "புலிகள் தனித்து வந்து சரணடைவதாக இருந்தால் ஓகே; ஆனால், சர்வதேச மத்தியஸ்தத்தோடு அவர்கள் சரணடைய விரும்பினால், நீங்கள் எதையும் செய்ய வேண்டாம், பேசாமல் தாக்குதலை நடத்தி முன்னேறுங்கள்" என்று கோட்டாபய உத்தரவிடுகிறார்.
இவை அனைத்தையும் அங்கிருந்த சிங்கள சிப்பாய் ஒருவர் வீடியோ எடுப்பதை சவேந்திர சில்வா கவனித்திருக்கவில்லை. இதனால் கோட்டாபய வழங்கிய உத்தரவை அவர் மிகச் சகஜமாகத் தனது ராணுவத்தினரிடம் விவரிக்கிறார். இதுவரை வெளிவராத இந்த ரகசிய வீடியோவை, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடந்த 18-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோவைக் காட்டி, "புலிகளின் தலைவர்களை ராஜபக்சக்கள் காப்பாற்ற முயன்றார்கள்" எனச் சம்பந்தமே இல்லாத ஒரு கருத்தைச் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளது முரணாக உள்ளது.
இந்த வீடியோவின் மூலம் கோட்டாபய ராஜபக்சவின் திட்டம் தெளிவாகப் புலப்படுகிறது. சர்வதேசப் பிரதிநிதிகள் முன்னிலையில் சரணடைந்தால் தலைவர்களைக் கொலை செய்ய முடியாது என்பதால், அவர்களைத் தனித்து வருமாறு கோட்டாபய வற்புறுத்துகிறார். சாட்சிகள் இல்லாத நிலையில் அவர்களை அழிப்பதே அவரது நோக்கமாக இருந்துள்ளது. தனது அரசியல் எதிரியான ராஜபக்சக்களைப் பழிவாங்குவதற்காக சரத் பொன்சேகா இந்த வீடியோவைப் பயன்படுத்தினாலும், அதில் பதிவாகியுள்ள உண்மைகள் மிகக் கொடுமையானவையாக உள்ளன.
