வெள்ளை மாளிகை பிப்ரவரி 9 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையில், அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா "உறுதி அளித்துள்ளது" (Committed to buy) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தியத் தரப்பிலிருந்து எழுந்த ஆட்சேபனையைத் தொடர்ந்து, தற்போது அந்த வார்த்தை "உத்தேசித்துள்ளது" (Intends to buy) என மாற்றப்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "இது ஒரு வணிகரீதியான விருப்பமே தவிர, கட்டாயமான கடப்பாடு அல்ல" என்று தெளிவுபடுத்தியதை அடுத்தே அமெரிக்கா இந்த மாற்றத்தைச் செய்துள்ளது.
அரசியல் ரீதியாக மிக முக்கியமான மாற்றமாக, இந்தியா இறக்குமதி வரி குறைக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் இருந்து "பருப்பு வகைகள்" (Certain Pulses) என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்கப் பருப்புகளுக்கு வரி சலுகை அளிப்பது இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் என புது தில்லி தரப்பில் கடுமையாக வலியுறுத்தப்பட்டது. மேலும், 500 பில்லியன் டாலர் கொள்முதல் பட்டியலில் இருந்து "விவசாயப் பொருட்கள்" (Agricultural goods) என்ற பொதுவான சொல்லையும் அமெரிக்கா தற்போது நீக்கியுள்ளது.
டிஜிட்டல் வர்த்தகம் தொடர்பான அம்சத்திலும் பெரிய பின்வாங்கல் நிகழ்ந்துள்ளது. "இந்தியா தனது டிஜிட்டல் சேவை வரிகளை (Digital Services Taxes) நீக்கும்" என்ற நேரடி வாசகத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக "இரு நாடுகளும் டிஜிட்டல் வர்த்தக விதிகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தும்" என மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா 2025 ஏப்ரல் முதல் ஆன்லைன் விளம்பரங்களுக்கான வரிவிதிப்பை நீக்கியிருந்தாலும், பிற டிஜிட்டல் வர்த்தக விதிகள் இன்னும் விவாதத்திலேயே உள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த 25% கூடுதல் வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இரு நாடுகளும் முழுமையாக ஒப்புக்கொள்ளாத சில விஷயங்கள் "கவனக்குறைவாக" (Inadvertently) சேர்க்கப்பட்டதாகவும், அதைத் திருத்தவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாற்றங்கள் இந்தியாவின் ராஜதந்திர வெற்றி எனக் கருதப்படுகிறது.
