பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட புதிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கும், எப்ஸ்டீனுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 2010-ம் ஆண்டு எப்ஸ்டீன் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, ஆண்ட்ரூ அவரை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்ததும், எப்ஸ்டீன் அவருக்கு ஒரு உருசிய பெண்ணை அறிமுகம் செய்ய முயன்றதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்தே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் 'மேற்பார்வைக் குழு' (House Oversight Committee) உறுப்பினர்கள், ஆண்ட்ரூ நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். "எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது முன்னுரிமை. இந்த வழக்கில் தொடர்புடைய தகவல் யாரிடம் இருந்தாலும், அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாகச் சொல்லிக்கொண்டு, உண்மைகளைப் பேச மறுக்க முடியாது" என்று அவர் மறைமுகமாக ஆண்ட்ரூவைச் சாடியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு தனது ராஜ மரியாதைகளையும் பட்டங்களையும் இழந்த ஆண்ட்ரூவுக்கு, சொந்த நாட்டுப் பிரதமரின் இந்த அறிக்கை மேலும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க எம்.பி.க்கள் ரோ கண்ணா (Ro Khanna) மற்றும் சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் இது குறித்துப் பேசுகையில், "ஆண்ட்ரூ ஒரு குற்றவாளி போலப் பாதுகாப்பு வளையத்திற்குள் ஒளிந்து கொள்ளாமல், உண்மைகளை வெளிப்படையாகப் பேசி தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். எப்ஸ்டீன் நடத்திய பாலியல் கடத்தல் நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பதை அறிய ஆண்ட்ரூவின் வாக்குமூலம் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு வெளிநாட்டுப் பிரஜையை (ஆண்ட்ரூ) கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைக்க முடியாது என்பதால், அவர் தானாக முன்வந்து சாட்சியமளிப்பாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதற்கிடையில், பிரிட்டன் போலீசார் ஆண்ட்ரூ மீது மற்றுமொரு புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர் பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, அரசு தொடர்பான ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்குக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பிரிட்டனின் 'அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின்' (Official Secrets Act) கீழ் குற்றமாகும். தனது தம்பியின் இந்தச் செயல்களால் ஆத்திரமடைந்துள்ள மன்னர் சார்லஸ், இந்தப் போலீஸ் விசாரணைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரண்மனை தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் இளவரசர் ஆண்ட்ரூ தற்போது இரு நாடுகளின் சட்ட நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்.
