பிரிட்டன், ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய நாடுகள் பிப்ரவரி 14, 2026 அன்று ஒரு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டன. அதில், 2024-ம் ஆண்டு ஆர்க்டிக் சிறையில் உயிரிழந்த அலெக்ஸி நவால்னியின் உடலில் 'எபபாட்டடின்' (Epibatidine) என்ற சக்திவாய்ந்த நச்சு இருந்ததை ஆய்வக முடிவுகள் உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்தன. இந்த நச்சு தென் அமெரிக்காவின் 'பாய்சன் டார்ட்' (Poison Dart Frog) வகை தவளைகளின் உடலில் இருந்து எடுக்கப்படுவதாகும். ரஷ்யாவில் இயற்கையாகக் கிடைக்காத இந்த நச்சை, ரஷ்ய அரசாங்கமே நவால்னிக்கு அளித்திருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் குற்றம் சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா (Maria Zakharova), இதனை "முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் கற்பனையானது" என்று விமர்சித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் தங்கள் சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இது போன்ற தகவல்களைப் பரப்புவதாக அவர் கூறினார். "தவளை விஷம் குறித்த இந்த அபத்தமான கதையை நம்புவதற்கு ஒரு நபர் எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும்?" என்று ரஷ்யத் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், போதிய அறிவியல் ஆதாரங்கள் இன்றி ரஷ்யாவைச் சீண்டுவதை அந்த நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா (Yulia Navalnaya), தனது கணவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். "புதின் ஒரு கொலைகாரர் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். எபபாட்டடின் நச்சானது மனித உடலில் பக்கவாதம், சுவாசத் தடை மற்றும் இறுதியில் கொடூரமான மரணத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. இந்த விவகாரத்தை சர்வதேச ரசாயன ஆயுதத் தடை அமைப்பிற்கு (OPCW) கொண்டு செல்ல ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நவால்னி உயிரிழந்தபோது, அவர் இயற்கை காரணங்களால் காலமானார் என்றே ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஏற்கனவே 2020-ம் ஆண்டில் 'நோவிசோக்' (Novichok) என்ற நச்சுத் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எழுந்துள்ள இந்த 'தவளை விஷ' சர்ச்சை, ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஐரோப்பிய நாடுகளின் இந்த ஆய்வறிக்கையைச் சந்தேகிப்பதற்குக் காரணமில்லை என்று தெரிவித்துள்ளார்.
.jpg)