GO BACK

வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? சர்ச்சைக்குரிய கருத்திற்கு விளக்கம் அளித்த பாரக் ஒபாமா

சமீபத்தில் பிரபல யூடியூபர் பிரையன் டைலர் கோஹன் (Brian Tyler Cohen) நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரக் ஒபாமாவிடம், "வேற்று கிரகவாசிகள் உண்மையானவர்களா?" என்ற நேரடி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அவர்கள் உண்மையானவர்கள், ஆனால் நான் அவர்களைப் பார்த்ததில்லை" என்று பதிலளித்தார். இந்தச் சுருக்கமான பதில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. அமெரிக்க அரசாங்கம் வேற்று கிரகவாசிகள் இருப்பதை ரகசியமாக மறைத்து வைத்திருப்பதை ஒபாமா இதன் மூலம் உறுதிப்படுத்திவிட்டதாகப் பலரும் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்தச் சர்ச்சை உலகளவில் வைரலானதைத் தொடர்ந்து, பிப்ரவரி 15-ம் தேதி இரவு ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில், "அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் மிக விரைவாகப் பதிலளிக்க வேண்டியவை (Speed Round). அந்த வேகத்தில் நான் அளித்த பதில் இப்போது விவாதமாகியுள்ளது. புள்ளிவிவரப்படி (Statistically) பார்த்தால், இந்தப் பிரபஞ்சம் மிகப்பெரியது; எனவே வேறு எங்காவது உயிர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற அர்த்தத்திலேயே நான் அவ்வாறு கூறினேன். ஆனால், எனது அதிபர் பதவிக் காலத்தில் வேற்று கிரகவாசிகள் மனிதர்களைத் தொடர்பு கொண்டதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை. இதுதான் உண்மை" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், நெவாடாவில் உள்ள ‘ஏரியா 51’ (Area 51) போன்ற ரகசிய இடங்களில் வேற்று கிரகவாசிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சதித் திட்டக் கருத்துக்களையும் (Conspiracy theories) ஒபாமா திட்டவட்டமாக மறுத்துள்ளார். "அங்கு வேற்று கிரகவாசிகள் வைக்கப்படவில்லை; அத்தகைய ரகசிய நிலத்தடி வசதிகள் எதுவும் கிடையாது. அப்படி ஒன்று இருந்திருந்தால், அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் அதனை மறைத்து வைத்திருக்க முடியாது" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். நட்சத்திர மண்டலங்களுக்கு இடையிலான தூரம் மிக அதிகம் என்பதால், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்திருக்க வாய்ப்பு குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், வானில் அவ்வப்போது தென்படும் இனம் கண்டறியப்படாத பறக்கும் பொருட்கள் (UAPs - Unidentified Aerial Phenomena) குறித்த பதிவுகள் அரசாங்கத்திடம் இருப்பதை ஒபாமா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். "விஞ்ஞான ரீதியாக விளக்க முடியாத சில பொருட்கள் வானில் தென்படுவது உண்மைதான். அவை எப்படி நகர்கின்றன, அவற்றின் வேகம் என்ன என்பது குறித்து எங்களிடம் பதிவுகள் உள்ளன. ஆனால் அவை வேற்று கிரகவாசிகளுடையது என்பதற்கு இன்னும் உறுதியான சான்றுகள் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். இந்த விளக்கத்தின் மூலம் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.