கடந்த 2025 அக்டோபர் வரை இம்ரான் கானுக்கு கண்பார்வை சீராக (6/6 vision) இருந்ததாகவும், அதன் பிறகு பார்வை மங்கத் தொடங்கியபோது அவர் பலமுறை சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவை அலட்சியப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக முறையான சிகிச்சை அளிக்காமல் வெறும் சாதாரண சொட்டு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டதால், பாதிப்பு தீவிரமடைந்து திடீரென முழுமையாகப் பார்வை பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞரும், பிடிஐ (PTI) கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதையடுத்து, தலைமை நீதிபதி யஹ்யா அப்ரிதி தலைமையிலான அமர்வு, இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஒரு சிறப்பு மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் விரிவான மருத்துவப் பரிசோதனையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர் தனது மகன்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதன் விளைவாகவே இந்த உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் கானின் கண்கள் தொடர்ந்து நீர் வடிந்தபடியும், அவர் மிகுந்த உடல் உபாதையுடனும் காணப்படுவதாக வழக்கறிஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முறையான மருத்துவ வசதி இல்லாத சிறை வளாகத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு பிடிவாதம் காட்டுவது அவரது பார்வையை நிரந்தரமாகப் பறிக்கும்ச் செயல் என எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர்.
