பிரிட்டனில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன்படி, முறையான ஆவணங்கள் இன்றி பிரிட்டனில் வசிப்பவர்களை "வெளியேற்றும் படலத்தை" (Removals) பெரிய அளவில் விரிவுபடுத்தப் போவதாக அவர் உறுதி அளித்துள்ளார். அரசின் இந்தத் திடீர் முடிவு அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன்னதாக, பிரிட்டன் அரசு மூன்று ஆப்பிரிக்க நாடுகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தால், அவர்களை மீண்டும் தங்கள் நாடுகளுக்கே அழைத்துக்கொள்ள அந்த நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஒருவேளை இந்த ஒப்பந்தத்திற்கு அந்த நாடுகள் ஒத்துவரவில்லை என்றால், அந்த நாட்டு மக்களுக்கான 'பிரிட்டன் விசா' ரத்து செய்யப்படும் எனப் பிரிட்டன் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே குடியேற்றப் பிரச்சினைகளால் பிரிட்டனில் பல்வேறு நெருக்கடிகள் நிலவி வரும் சூழலில், ஷபானா மஹ்மூத்தின் இந்தத் திட்டம் "கறாரான நடவடிக்கை" என ஒரு தரப்பினரால் வரவேற்கப்படுகிறது. இருப்பினும், மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விசா அச்சுறுத்தலைக் காட்டி ஆப்பிரிக்க நாடுகளைப் பணிய வைப்பது முறையற்றது என்றும், இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, வரும் மாதங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் பிரிட்டனை விட்டு வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. "பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பும், விதிகளும் அனைவருக்கும் சமம்; அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்பதில் உள்துறை அமைச்சகம் மிக உறுதியாக இருக்கிறது. இதனால் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள வெளிநாட்டினர் மத்தியில் இப்போது ஒருவித பயமும் கலக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது.