சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய விஜய், ஆளுங்கட்சியான திமுக-வை மிகக் கடுமையாகச் சாடினார். "மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, தவெக-வை அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் தற்போதைய கனவு. அந்த கனவு 2026-இல் 100 சதவீதம் நனவாகும். இந்தத் தேர்தல் என்பது மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா அல்லது மக்களைத் துயரத்தில் ஆழ்த்தும் ஸ்டாலின் வேண்டுமா என்பதற்கான போட்டி" என்று அவர் அதிரடியாக முழங்கினார்.
தன்னைப் பனையூர் வீட்டை விட்டு வெளியே வருமாறு சீண்டியவர்களுக்குப் பதிலளித்த விஜய், "தமிழ்நாடு தான் என் வீடு; இங்குள்ள 8 கோடி மக்களும் என் குடும்பம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடும் தமிழக அரசைச் சாடிய அவர், "மற்ற கட்சிகளுக்குக் கிடைக்கும் அனுமதி நமக்கு ஏன் மறுக்கப்படுகிறது? நான் மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தது தவறா? இதற்காக நான் மக்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன்" என்றார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் விஜய் குற்றம் சாட்டினார். "ஆட்சிக்கு வரும்போது பொய் சொன்னார்கள், இப்போது ஆட்சியை விட்டுப் போகும் போதும் பொய் பேசுகிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புளுகர் பெருமானே" என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாகச் சாடினார். ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் விரைவில் செல்லாததாகிவிடும் என்றும், மக்கள் திமுக ஆட்சியைப் பொக்கிஷமாக அல்லாமல் குப்பையாகக் கருதித் தூக்கியெறியப் போகிறார்கள் என்றும் அவர் கடுமையாகப் பேசினார்.
தவெக-வுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று சொல்பவர்களுக்குப் பதிலளித்த விஜய், "மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதில் வேண்டுமானால் எங்களுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், 50-70 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட கட்சிகளைத் தாண்டி, இன்று 30 சதவீத ஆதரவுடன் களத்தில் தனித்து நிற்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. காமராஜர், எம்ஜிஆர் போல மக்களுக்கான நல்லாட்சியை எங்களால் கொடுக்க முடியும்; அதை நான் செய்தும் காட்டுவேன்" என்று உறுதிபடத் தெரிவித்தார். 2026 தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் நேரடிப் போட்டி என்பதையும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.
