தமிழ் திரையுலகின் இரு துருவங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மெகா பட்ஜெட் படத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பேரனும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்தச் செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இப்படத்தை 'ஜெயிலர்' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும், இன்பநிதியுடன் இணைந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மற்றும் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகச் சென்னையில் கார் மெக்கானிக் ஷெட்டுகள் மற்றும் பிரம்மாண்ட ஹோட்டல் செட்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. ரஜினியும் கமலும் சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்திற்கான ப்ரோமோ படப்பிடிப்பில் ரகசியமாகக் கலந்துகொண்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தின் மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், ரஜினி மற்றும் கமல் இருவருமே இப்படத்திற்குச் சம்பளம் வாங்காமல், படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை (Profit Sharing) ஊதியமாகப் பெற ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் ப்ரோமோ பணிகளை முடித்து, ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தளிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினிகாந்த் தனது 173-வது படமான சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலான படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கிவிடுவார் எனத் தெரிகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினி-கமல் இணையும் இந்தப் படம், இன்பநிதியின் முதல் தயாரிப்பு என்பதால் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. "அதிகாரத்தில் இருப்பவர்களின் வாரிசு, கோலிவுட்டின் இரு பெரும் ஆளுமைகளை வைத்துப் படம் எடுப்பது சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும்" என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)