தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துப் பேசுகையில் நடிகை திரிஷாவின் பெயரை இழுத்து விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டது, அரசியல் நாகரிகமற்றது என்றும், தனிமனித ஒழுக்கத்தைச் சிதைக்கும் வகையில் உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருப்பவர், பொதுவெளியில் ஒரு பெண்ணைக் குறித்து இவ்வாறு இழிவாகப் பேசுவது முறையல்ல எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
முன்னதாக சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், "தன்னை வீட்டை விட்டு வெளியே வரும்படி விமர்சிப்பவர்களுக்கு, தமிழ்நாடே தனது வீடு என்றும், 8 கோடி மக்களுமே தனது சொந்தம்" என்றும் உணர்ச்சிகரமாகப் பதிலளித்திருந்தார். விஜய்யின் இந்த கருத்துக்குப் பதில் அளிக்க முற்பட்ட நயினார் நாகேந்திரன், வரம்பு மீறிப் பேசியது திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் மட்டுமின்றி, சொந்தக் கட்சியினரிடையேயும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், "நயினார் நாகேந்திரன் பொதுவாகப் பண்பாகவும் நாகரிகமாகவும் பேசக்கூடியவர்; அவர் ஏன் திரிஷா குறித்து அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை, அது எனக்கு வருத்தமாக உள்ளது" என்று வெளிப்படையாகத் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். அதேசமயம், திமுகவினர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் நாடகம் ஆடுவதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டிய அவர், நயினார் நாகேந்திரனின் கருத்தைச் சுட்டிக்காட்டும் திமுகவினர், தங்கள் கட்சியில் இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் பேச்சுகளைப் பார்க்க வேண்டும் என்றும் சாடினார்.
தன்னுடைய கருத்துக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருவதால், இன்று செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது நயினார் நாகேந்திரன் எந்தப் பதிலும் கூறாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டுச் சென்றார். நடிகை திரிஷா மற்றும் விஜய் தரப்பிலிருந்து இதற்கு அதிகாரப்பூர்வமான எதிர்வினைகள் எதுவும் இதுவரை வரவில்லை என்றாலும், திரைத்துறையினர் மற்றும் பெண் உரிமை அமைப்புகள் நயினார் நாகேந்திரன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
