எல்லை வேலிகளுக்கு அருகே உள்ள புதர்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி, ஊடுருவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேலிய விமானங்கள் சிரிய எல்லைக்குள் பல மீட்டர் தூரம் ஊடுருவி, அங்குள்ள கோதுமை மற்றும் காய்கறித் தோட்டங்களில் நேரடியாக இந்த வேதிப்பொருட்களைத் தெளித்துள்ளன. இதனால் பச்சை பசேலென இருந்த பயிர்கள் ஒரே நாளில் மஞ்சள் நிறமாக மாறி கருகிப் போயுள்ளன.
சிரியாவின் குனைட்ரா மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'கிளைபோசேட்' (Glyphosate) எனப்படும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பயிர்களை மட்டுமின்றி, மண்ணின் வளத்தையும், கால்நடைகளின் தீவனத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் ஏழை விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
சர்வதேச சட்டங்களின்படி, ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விவசாய நிலங்களைச் சிதைப்பது 'போர்க்குற்றம்' (War Crime) என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை (UNDOF) முகாமுக்கு அருகிலேயே இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளதால், இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)