
"அதனால் தான் என் மகளைக் கொன்றேன்": பெற்ற மகளையே தீர்த்துக்கட்டிய தந்தை!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி வர்ஷினி, சேலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் அதிரடித் திருப்பமாக அவரது தந்தை வரதராஜனே (52) கொலையாளி எனத் தெரியவந்துள்ளது. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்த வர்ஷினி, கடந்த ஜனவரி 7-ஆம் தேதி தான் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மர்ம மரணம் குறித்து இரும்பாலை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வர்ஷினியின் தந்தை வரதராஜன் நேற்று போலீசாரிடம் சிக்கினார்.
கைது செய்யப்பட்ட தந்தை வரதராஜன் அளித்துள்ள வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வர்ஷினி பிளஸ்-2 படிக்கும்போது, பள்ளிக்கு வந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். அந்தப் பயிற்சியாளருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும், வர்ஷினி தனது காதலைக் கைவிட மறுத்துள்ளார். மகளின் பிடிவாதத்தால் ஆத்திரமடைந்த தந்தை, அவரை சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்த்தும் அந்தத் தொடர்பு தொடர்ந்தது அவரது கோபத்தை உச்சக்கட்டத்திற்கு ஆளாக்கியுள்ளது.
சம்பவம் நடந்த நாளன்று, மகளை நேரில் சந்தித்து காதலைக் கைவிடுமாறு வரதராஜன் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், வர்ஷினி தனது முடிவில் உறுதியாக இருந்ததால், ஆத்திரமடைந்த தந்தை அவரை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் வர்ஷினி கீழே விழுந்த நிலையில், அவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி வரதராஜன் கொலை செய்துள்ளார். பெற்ற மகளைத் தனது கைகளாலேயே கொலை செய்த அந்தத் தந்தை, தற்கொலை போலச் சித்தரிக்க முயன்றது விசாரணையில் அம்பலமானது.
கொலைக்குப் பிறகு மகளின் செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியோடிய வரதராஜன், தனது பாவத்தைக் கழிக்க சென்னை வடபழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்துள்ளார். பின்னர் திருப்பதி, திருவண்ணாமலை என ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு தலைமறைவாக இருந்துள்ளார். போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த அவர், நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டு சேலம் வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். ஒரு தந்தையே தனது கௌரவத்திற்காக மகளைக் கொலை செய்த இந்தச் சம்பவம் "ஆணவக் கொலை" என்ற கோணத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.